மும்பை : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாத்தம், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார்.
ஆடுகளம் முதல் நாளில் பேட்டிங்க்கு சாதகமாக இருப்பதால்,இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்த ரோகித் சர்மா தாமும் முதலில் பேட்டிங்தான் செய்ய இருந்ததாக கூறியிருந்தார்.
இந்த சூழலில் இந்திய அணியில் இன்று மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் களமிறங்கினார்கள்.

அது மட்டுமில்லாமல் முகமது சிராஜ் அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதில் ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் புனே, ஆடுகளம் மிகவும் காய்ந்த நிலையில் இருந்தது. இதனால் வேகப்பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. பும்ரா, ஆகாஷ் தீப் ஆகியோர் பந்து வீச கொஞ்சம் கூட பந்து ஸ்விங் ஆகவில்லை.
பந்து நேராக பேட்டுக்கு தான் வந்தது. விக்கெட் எடுத்துக் கொடுப்பார்கள் என ரோகித் சர்மா நம்பி இருந்தார். ஆனால் ஆடுகளம் அதுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதை ரோகித் சர்மா உணர்ந்து கொண்டார். இதனை அடுத்து ஆட்டத்தின் எட்டாவது ஓவரில் அஸ்வினை உடனடியாக பந்து வீச ரோகித் சர்மா அழைத்தார்.
கடந்த டெஸ்ட் போட்டியில் கொஞ்சம் தடுமாறிய அஸ்வின் இன்று ஆட்டத்தில் பந்து வீச தொடங்கியபோது ,அவருக்கு ஆடுகளம் கொஞ்சம் ஒத்துழைத்தது. இதனை பயன்படுத்திக் கொண்ட அஸ்வின் தான் வீசிய முதல் ஓவரிலேயே ஐந்தாவது பந்தில் நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாத்தமை lbw ஆக்கினார்.
இதன் மூலம் லாத்தம், 15 ரன்களில் வெளியேறினார். இதன் அடுத்து வேகபந்துவீச்சாளர்களை சுத்தமாக நிறுத்திய ரோகித் சர்மா, தொடர்ந்து சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து போட்டியை நகர்த்திக் கொண்டு வருகிறார். ஒருபுறம் அஸ்வின் இன்னொரு புறம் வாஷிங்டன் சுந்தரை வைத்து இரண்டு புறமும் ரோகித் சர்மா அட்டாக் செய்து வருகிறார். எனினும் நியூசிலாந்தின் ரன் வேகத்தை மட்டுமே இது குறைக்க உதவியது தவிர விக்கெட் எடுக்க உதவவில்லை. ஆடுகளம் நினைத்த மாதிரி எடுத்த உடனே சுழற்பந்துவீச்சுக்கு முற்றிலும் சாதகமாக செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.