பெங்களூர்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய பெங்களூர் டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செய்த உதவிதான் தனது சிறப்பான பேட்டிங்கிற்கு காரணம் என பேசி இருக்கிறார். இதன் மூலம், இந்திய அணியின் தோல்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒரு வகையில் காரணம் என சூசகமாக கூறி இருக்கிறார்.
ரச்சின் ரவீந்திரா பெங்களூர் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் சேர்த்து இருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்தாம் நாள் அன்று கடைசி வரை ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்த சிறப்பான பேட்டிங்கிற்கு சிஎஸ்கே அணி அளித்த பயிற்சியே காரணம் என அவர் கூறி இருக்கிறார்.

நியூசிலாந்து அணி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆசிய கண்டத்தில் ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக தயாராகி வந்தது. இந்திய மண்ணில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியிலும், அடுத்து இலங்கை அணிக்கு எதிராக இலங்கை மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், அடுத்த இந்திய அணிக்கு எதிராக இந்திய மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் நியூசிலாந்து அணி விளையாட இருந்தது.
அதற்கு முன் ஆசிய கண்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை தயார்படுத்தும் வகையில் ரச்சின் ரவீந்திரா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் பயிற்சி செய்ய உதவி கேட்டு இருந்தார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியை சேர்ந்தவர் என்பதால் அந்த அணி நிர்வாகம் அவருக்காக சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்தது.
சிஎஸ்கே அணியின் பயிற்சி மையத்தில் பல்வேறு பிட்ச்களில் பல நெட் பவுலர்களை வைத்து ரச்சின் ரவீந்திரா பயிற்சி செய்தார். இந்த நிலையில் அவர் அந்த அனுபவத்தை இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியில் பயன்படுத்தி இருக்கிறார். மேலும், போட்டி நடந்த பெங்களூர் ரச்சின் ரவீந்திராவின் சொந்த ஊராகும்.
தன் சொந்த ஊரில் சிஎஸ்கே அணி அளித்த பயிற்சியின் உதவியுடன் அவர் இந்திய அணியை வீழ்த்த உதவி இருக்கிறார். இது பற்றிய ரச்சின் பேசுகையில், "பெங்களூர் நல்ல நகரம். இங்கு பேட்டிங் செய்வது எளிதாக இருந்தது. பல விஷயங்களும் எனக்கு சாதகமாக இருந்தன. என்னுடைய ஃபார்ம் மற்றும் இந்தத் தொடருக்காக நான் என்னை தயார் செய்து கொண்டது எனக்கு உதவியது." என்றார்.
"தொடர்ந்து ஆறு போட்டிகளில் விளையாட வேண்டி இருந்ததால், ஏதேனும் அதிகமாக நாம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக சிஎஸ்கே உதவியுடன் பயிற்சியில் ஈடுபட்டேன். அது இன்று பலன் அளித்திருப்பது எனது அதிர்ஷ்டம். நான் வெவ்வேறு பிட்ச்களை பற்றி அறிந்து கொள்ள முயற்சி செய்தேன். சிவப்பு மண் மற்றும் கருப்பு மண் பற்றி அறிந்து கொள்ள முயற்சி செய்தேன். அதில் வெவ்வேறு பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நான் விளையாடினேன். ஒவ்வொரு நாளும் நெட் பவுலர்கள் எனக்கு பந்து வீசினார்கள். அது மதிப்பிட முடியாத அனுபவமாக இருந்தது. சென்னையில் எனக்கு அந்த வாய்ப்பை அளித்தவர்களுக்கு (சிஎஸ்கே) நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்." என்று ரச்சின் ரவீந்திரா கூறி இருக்கிறார்.