
ரோஹித் சர்மா இல்லை
டெஸ்ட் தொடருக்கு முன் நடந்த ஒருநாள் தொடரில் இந்தியா 3 - 0 மோசமாக தோற்ற போதும் ரோஹித் சர்மா அணியில் இல்லை என்ற காரணம் கூறப்பட்டது. தற்போது டெஸ்ட் தொடரில் வைட்வாஷ் தோல்வி அடைந்த போதும் அதே காரணத்தை தான் முதன்மையாக கூற வேண்டி உள்ளது.

துவக்கம் மோசம்
ரோஹித் சர்மா இல்லாத நிலையில், இந்திய அணிக்கு மயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா துவக்கம் அளித்தனர். இருவரும் ஒரு இன்னிங்க்ஸில் கூட 50 ரன்கள் வரை விக்கெட் விழாமல் பார்த்துக் கொள்ளவில்லை. யாரேனும் ஒருவர் ஓரளவு ரன் சேர்த்தால், மற்றவர் விரைவாக ஆட்டமிழப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர். அவர்களின் விரைவான விக்கெட் வீழ்ச்சியால் ஏற்படும் அழுத்தத்துடன் அடுத்து வரும் வீரர்கள் ஆட வேண்டிய நிலை இருந்தது.

கோலி பார்ம் அவுட்
இந்த தொடரில் அதிகம் பேசப்பட்ட விஷயம் கோலியின் பார்ம் அவுட் தான். டேச்த்ட் தொடரின் நான்கு இன்னிங்க்ஸ்களில் அவர் எடுத்த ரன்கள் 38. இதுவே கோலியின் படுமோசமான டெஸ்ட் தொடராக கூறப்படுகிறது. பவுன்ஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அவர் தொடர்ந்து ஆட்டமிழந்தது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

புஜாரா ஏமாற்றம்
டெஸ்ட் மன்னன் என அறியப்படும் நிதான பேட்ஸ்மேன் புஜாரா, இந்த தொடரில் ஒரு அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார். ஆனால், முதல் போட்டியிலும், முக்கியமான இரண்டாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்க்ஸிலும் அவர் அணியை கை விட்டார். இவரும் பவுன்ஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினார்.

தட்டுத் தடுமாறிய ரஹானே
முதல் போட்டியில் ரஹானே 46 மற்றும் 29 ரன்கள் எடுத்தார். அப்போது சிறப்பாகஆடியதாக பாராட்டப்பட்ட அவர், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஷார்ட் பால் வீசப்பட்ட போது தடுமாறி தன் பலவீனத்தை வெளிப்படுத்தினார். இரண்டாவது போட்டியில் பந்தை அடிக்கவே முடியாமல் திணறி, 7 மற்றும் 9 ரன்களே எடுத்தார்.

ரிஷப் பண்ட் என்ன செய்தார்?
ரிஷப் பண்ட் இந்த தொடரில் எடுத்த ரன்கள் 19, 25, 12 மற்றும் 4. விரிதிமான் சாஹாவுக்கு பதில் இவரை தேர்வு செய்தார் கேப்டன் கோலி. காரணம், இவர் சாஹாவை விட நல்ல பேட்ஸ்மேனாம். இந்த தொடருக்கு பின் ரிஷப் பண்ட் இந்திய அணியில் இடம் பெற்றால் நிச்சயம் கடும் விமர்சனம் எழும். அந்த அளவுக்கு தான் ஆடி இருக்கிறார் பண்ட்.

கோலி அணித் தேர்வு
பண்ட்டை அணியில் எடுத்தது போலவே, கேப்டன் கோலி அணித் தேர்வில் நிறைய குழப்பங்களை செய்தார். முதல் போட்டியில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள், ஒரு சுழற் பந்துவீச்சாளர் என்ற திட்டத்தை செயல்படுத்தினார். அஸ்வின் முதல் போட்டியில் ஆடி 3 விக்கெட் வீழ்த்தினார்.

ஜடேஜாவுக்கு ஓவர் இல்லை
முதல் போட்டியில் அஸ்வின் ரன் குவிக்கவில்லை என்ற அதிர்ச்சி காரணத்தை கூறி ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டார். ஏற்கனவே, முதல் போட்டியில் 5 விக்கெட் எடுத்த இஷாந்த் சர்மா காயத்தால் விலகிய நிலையில், அடுத்ததாக அதிக விக்கெட் எடுத்த அஸ்வினும் நீக்கப்பட்டார். இரண்டாவது போட்டியில் அஸ்வினுக்கு பதில் இடம் பெற்ற ஜடேஜாவும் பேட்டிங்கில் ரன் குவிக்கவில்லை. அவருக்கு வெறும் 10 ஓவர் தான் கொடுத்தார் கோலி.

பகுதி நேர பந்துவீச்சாளர் எங்கே?
நியூசிலாந்து அணியில் ஒரு பகுதி நேர பந்துவீச்சாளர் இருந்ததால் அந்த அணி நான்கு பந்துவீச்சாளர் மற்றும் ஒரு பகுதி நேர பந்துவீச்சாளரை சுழற்சி முறையில் அபாரமாக பயன்படுத்தியது. ஆனால், இந்திய அணி பகுதி நேர பந்துவீச்சாளர் இல்லாமல் திணறியது. ஹனுமா விஹாரி சுழற் பந்துவீச்சாளர் என்பதால் அவருக்கு ஓவர் அளிக்கவில்லை. இரண்டாம் போட்டியில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமே மாற்றி, மாற்றி பந்து வீசினர்.

முதல் போட்டியில் பும்ரா, ஷமி
பும்ரா, ஷமி இருவரும் முதல் போட்டியில் அணியை கை விட்டனர். விக்கெட் வீழ்த்த திணறினர். இரண்டாவது போட்டியில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், இஷாந்த் சர்மா அணியில் இல்லாதது பின்னடைவாக அமைந்தது.


Click it and Unblock the Notifications