புனே: நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி இழந்து இருக்கும் நிலையில் ரோஹித் சர்மா எடுத்த தவறான முடிவு தான் இதற்கு காரணம் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். அவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக வியூகம் வகுத்து அதில் இந்திய பேட்ஸ்மேன்களை சிக்க வைத்து இருக்கிறார் எனவும், இந்திய பேட்ஸ்மேன்களின் பலவீனத்தை அவர் சரியாக கையாளவில்லை எனவும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்கள் அதிகம் தயார் செய்யப்பட்டன. அவை பேட்ஸ்மேன்களுக்கும் வேகப் பந்துவீச்சாளர்களுக்கும் சரிசமமான வாய்ப்பை அளித்தன. அதே சமயம் சுழற் பந்துவீச்சாளர்கள் அந்த பிட்ச்களில் அதற்கு முன் இருந்த அளவுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியாத சூழ்நிலை இருந்தது.

அதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் போட்டி சூழ்நிலையில் அதிக அளவில் சுழற் பந்துவீச்சை சந்தித்து இருக்கவில்லை. அதனாலேயே சுழற் பந்துவீச்சை சந்திப்பதில் இப்போது இருக்கும் பேட்ஸ்மன்களுக்கு சிரமம் உள்ளது. இந்த நிலையில் தான் நியூசிலாந்து அணி, இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி, தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் படுதோல்வி அடைந்திருந்தது.
அங்கிருந்து நேராக இந்தியாவுக்கு வந்த நியூசிலாந்து அணியை அதே போன்ற சுழற் பந்து வீச்சு வியூகத்தை வைத்து வீழ்த்தலாம் என கேப்டன் ரோஹித் சர்மா திட்டமிட்டார். இதன் மூலம் நியூசிலாந்து அணியை அதிக ரன்கள் அடிக்க விடாமல் செய்யலாம் என்ற அவரது திட்டம் சரிதான். அதே சமயம் இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற் பந்துவீச்சில் திணறி வருவதை பற்றி அவர் யோசிக்கவில்லை.
குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய மண்ணிலேயே சுழற் பந்துவீச்சாளர்களிடம் அதிக முறை விக்கெட்களை இழந்து இருக்கிறார். அவர்களுக்கு எதிராக ரன் குவிக்கவும் அவர் திணறி வருகிறார். இந்த விஷயத்தை யோசிக்காத ரோஹித் சர்மா சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை தயார் செய்யுமாறு பிசிசிஐ-க்கு ஆலோசனை அளித்திருந்தார்.
அதிலும் ஒரு சொதப்பல் நடந்தது. முதல் போட்டி நடந்த பெங்களூரு மைதானத்தில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் தயார் செய்யப்பட்டு வந்தபோது இடையே மழை பெய்தது. அதனால், அந்த பிட்ச் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியது. அதை பயன்படுத்தி நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியின் திட்டங்களை உடைத்து விக்கெட் வேட்டையாடினர்.
பிட்ச் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என நினைத்து ரோஹித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இந்தியா அப்போது 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது. அந்த முதல் தவறு நடந்த பின்னும் சுதாரிக்காத ரோஹித் சர்மா மீண்டும் புனே மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்யுமாறு ஆலோசனை அளித்திருந்தார்.
இந்த முறை எப்படியும் நியூசிலாந்து அணியை சுழற் பந்துவீச்சை வைத்து வீழ்த்தி விடலாம் என அவர் நினைத்தார். ஆனால், நியூசிலாந்து அணி மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை களம் இறக்கியது. நியூசிலாந்தின் இந்த வியூகத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிக்கினர். அதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணி. இரண்டாவது இன்னிங்ஸில் 359 ரன்களை நோக்கி ஆடிய இந்திய அணி போராடி 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ரோஹித் சர்மா சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து நியூசிலாந்தை வீழ்த்தலாம் என போட்ட கணக்கு இந்திய அணிக்கு எதிராகவே திரும்பி இருக்கிறது. தற்போது நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 2 - 1 என வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது.