நாக்பூர்: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் அபிஷேக் சர்மாவின் அதிரடி இன்னிங்ஸ் ஒருபுறம் இருக்க, கடைசி நேரத்தில் ரிங்கு சிங் ஆடிய ஆட்டம் இந்திய அணியை 238 ரன்கள் என்ற இமாலய ஸ்கோருக்கு அழைத்துச் சென்றது. வெறும் 20 பந்துகளில் 44 ரன்கள் விளாசிய ரிங்கு சிங், போட்டி முடிந்த பிறகு தனது ஆட்டம் குறித்தும், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கொடுத்த அறிவுரை குறித்தும் மனம் திறந்து பேசினார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெற்றிக்குப் பிறகு பேசிய ரிங்கு சிங், "உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் என் மீது கொஞ்சம் அழுத்தம் இருந்தது. ஏனெனில் நான் தொடர்ந்து அணியில் இடம்பெறவில்லை. உள்ளே வருவதும், வெளியே போவதுமாக இருந்தேன். எனவே கிடைத்த வாய்ப்பில் என்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது."

"ஆரம்பத்தில் நிதானமாக சிங்கிள்ஸ் எடுத்துவிட்டு, பிறகு அதிரடியாக விளையாட வேண்டும் என்பதுதான் திட்டம். குறிப்பாகக் கடைசி வரை களத்தில் நிற்க வேண்டும் என்று நினைத்தேன். அதைச் சரியாகச் செய்ததில் மகிழ்ச்சி" என்று கூறினார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனக்குக் கொடுத்த அறிவுரை குறித்தும் ரிங்கு பகிர்ந்து கொண்டார். "ஜிஜி சார் (கம்பீர்) என்னிடம் எப்போதும் அந்த வேகத்தையும், நோக்கத்தையும் கைவிடக் கூடாது என்று கூறினார். பயப்படாமல் விளையாட வேண்டும் என்பதுதான் அவர் எனக்குச் சொன்ன பாடம்" என்று தெரிவித்தார்.
கடைசி கட்டத்தில் அர்ஷ்தீப் சிங் சில பந்துகளை அடிக்க முடியாமல் திணறினார். அப்போது அவருடன் என்ன பேசினீர்கள் என்று கேட்டதற்கு, ரிங்கு சிரித்துக்கொண்டே பதிலளித்தார். "நான் அர்ஷ்தீப் பாஜியிடம் பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை. அவர் சில டாட் பால்களை ஆடினார். 'பரவாயில்லை, பதற்றப்படாமல் அமைதியாக நில்லுங்கள். எப்படியாவது ஒரு ரன் எடுத்து எனக்கு ஸ்ட்ரைக் கொடுங்கள் போதும்' என்று மட்டும்தான் கூறினேன். கிரிக்கெட்டில் இதெல்லாம் சகஜம்" என்றார்.
ஃபீல்டிங்கின் போது ஒரு கேட்சை ரிங்கு சிங் தவறவிட்டார். மைதானத்தின் விளக்கு வெளிச்சம் காரணமாகத் தவறவிட்டீர்களா என்று கேட்டதற்கு, "விளக்கு வெளிச்சம் எல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை. அது சாதாரண ஒரு கேட்ச் டிராப் தான். அதைப் பற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை. தவறுகள் நடப்பது இயல்பு" என்று மிகத் தெளிவாகப் பதிலளித்தார்.
"இந்த வெற்றியின் மூலம் கிடைத்த நம்பிக்கையை உலகக்கோப்பைத் தொடர் வரை கொண்டு செல்ல விரும்புகிறோம். இந்த உத்வேகத்துடன் உலகக்கோப்பையை வெல்வதே எங்களின் ஒரே குறிக்கோள்" என்று ரிங்கு சிங் நம்பிக்கையுடன் முடித்தார்.