பெங்களூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 99 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்துள்ளார். இதன் மூலமாக 7வது முறையாக சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்ததுடன், புதிய வரலாறு படைக்கும் வாய்ப்பையும் இழந்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று சாதனையை நோக்கி பயணித்து வருகிறது. 4வது நாள் ஆட்டத்தை இந்திய அணி 231 ரன்களுடன் தொடர்ந்தது. இந்திய அணியின் சர்ஃபராஸ் கான் - ரிஷப் பண்ட் கூட்டணி பேட்டிங்கை தொடங்கியது. ஒரு பக்கம் அதிரடியாக ஆடிய சர்ஃபராஸ் கான் சதத்தை எட்ட, இன்னொரு பக்கம் ரிஷப் பண்ட் நிதானமாக ஆடிக் கொண்டிருந்தார்.

பின்னர் இடதுகை ஸ்பின்னரான அஜாஸ் படேல் அட்டாக்கில் வர, அந்த ஓவரிலேயே அடுத்தடுத்து 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரியை பறக்கவிட்டார். கிளென் பிலிப்ஸ், அஜாஸ் படேல், ரச்சின் ரவீந்திரா என்று எந்த ஸ்பின்னர் அட்டாக்கில் வந்தாலும், ரிஷப் பண்ட் ஒரே பாணியில் பொளந்து கட்டினார். இதன் காரணமாக 55 பந்துகளிலேயே ரிஷப் பண்ட் அரைசதத்தை எட்டினார்.
இதன்பின் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட, சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் மீண்டும் தொடங்கப்பட்டது. அப்போதும் ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஓவரிலும் ஒரு பவுண்டரி விளாசி வந்தார். இதனால் கண்மூடி திறப்பதற்குள் 80 ரன்களுக்கு மேல் வந்தார். இன்னொரு பக்கம் சர்ஃபராஸ் கான் 150 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் கேஎல் ராகுல் வந்தார்.
புதிய பந்து எடுத்த பின், நியூசிலாந்து அணியின் திட்டம் சரியாக செயல்பாட்டுக்கு வந்தது. ரிஷப் பண்ட் பேட்டிங்கில் நிதானம் காட்ட, ஒவ்வொரு ரன்னாக எடுத்து 90 ரன்களை எட்டினார். அப்போது டிம் சவுதி வீசிய பந்தில் அபாரமாக ஒரு சிக்சரை விளாசினார். அந்த சிக்ஸ் 107 மீட்டர் தூரம் சென்று விழுந்தது. இதனை பார்த்த நியூசிலாந்து அணி வீரர் கிளென் பிலிப்ஸ் வாயை பிளந்து வியப்பை வெளிப்படுத்தினார்.
இதனால் ரிஷப் பண்ட் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 99 ரன்களில் இருந்த போது ஓரூர்க் வீசிய பந்தில் இன்-சைட் எட்ஜாகி போல்டாகி வெளியேறினார். இதனால் இந்திய அணி வீரர்கள் அனைவரும் சோகமடைந்தனர். சின்னச்சாமி மைதானமே மொத்தமாக மயான அமைதியானது. இதன் மூலமாக 7வது முறையாக ரிஷப் பண்ட் 90களில் ஆட்டமிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.