இந்திய மண்ணில் டெஸ்ட் கிங் தான்.. அதுக்காக இப்படியா செய்யணும்.. ரிஷப் பண்ட்டின் வேற லெவல் ரெக்கார்டு
பெங்களூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் 99 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதன் மூலம் இந்திய மண்ணில் டெஸ்ட் கிங் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார் பண்ட். அவர் இந்திய மண்ணில் அசாதாரணமான டெஸ்ட் ரெக்கார்டை வைத்துள்ளார்.
இதுவரை இந்திய மண்ணில் 17 இன்னிங்ஸ்களில் 919 ரன்கள் எடுத்து இருக்கிறார் ரிஷப் பண்ட். இந்தியாவில் மட்டும் இரண்டு சதம் மற்றும் ஏழு அரை சதங்கள் அடித்து இருக்கிறார். இதில் சோகம் என்னவென்றால் அவர் இந்திய மண்ணில் மட்டும் ஐந்து சதங்களை அருகே சென்று தவற விட்டு இருக்கிறார்.

ஆம், ஐந்து முறை 90 ரன்கள் எடுத்த பின் ரிஷப் பண்ட் தனது விக்கெட்டை பறிகொடுத்து இருக்கிறார். இது இந்திய மண்ணில் மட்டும் நடந்த விஷயம். ஒட்டுமொத்தமாக அவர் இதுவரை ஏழு முறை 90 ரன்கள் குவித்த பின் தனது விக்கெட்டை இழந்து இருக்கிறார். இதுவரை அவர் ஆறு டெஸ்ட் சதங்கள் அடித்து இருக்கும் நிலையில், இந்த ஏழு தவறிப்போன சதங்களையும் அடித்திருந்தால் தற்சமயம் 13 சதங்கள் அடித்த இந்திய வீரராக இருந்திருப்பார்.
அவர் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 2551 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கும் நிலையில் இது அசாதாரணமான சாதனையாக இருந்திருக்கும். எனினும், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது அவர் வெளிநாட்டை விட இந்திய மண்ணில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் மிக அபாரமாக ரன் சேர்த்து இருக்கிறார்.
ரிஷப் பண்ட் தனது துவக்க காலத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடி இருந்தார். அதனால் வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக ஆடுபவர் என்று பெயரை பெற்றிருந்தார். ஆனால் அங்கு மட்டுமல்ல இந்திய மண்ணிலும் சிறப்பாக ஆடுவேன் என்பதை மீண்டும் அவர் நிரூபித்து இருக்கிறார்.
இந்திய மண்ணில் அவரது டெஸ்ட் பேட்டிங் சராசரி 61 ஆக உள்ளது வெளிநாடுகளில் அவரது பேட்டிங் சராசரி 39.6 ஆக உள்ளது. விராட் கோலி வெளிநாட்டு மண்ணில் 41 என்ற அளவில் தான் பேட்டிங் சராசரி வைத்துள்ளார். அதனுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது ரிஷப் பண்ட்டின் வெளிநாட்டு டெஸ்ட் பேட்டிங் சராசரி சிறப்பாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications