மும்பை: "நீங்கள் மும்பை, டெல்லி அல்லது பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர் இல்லையென்றால், இந்திய அணியில் இடம்பிடிக்கத் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்க வேண்டும்" என்று ருதுராஜ் கெய்க்வாட் நீக்கம் குறித்து முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் அடித்திருந்தும், நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்படாதது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்து.

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில், ஸ்ரேயாஸ் ஐயருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், கடந்த போட்டியில் 105 ரன்கள் அடித்த ருதுராஜ் கெய்க்வாட் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டுள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயர் முழு உடல் தகுதியை நிரூபிப்பாரா என்ற சந்தேகம் இருந்த நிலையிலும், ருதுராஜை மாற்று வீரராகக் கூடத் தேர்வுக்குழு பரிசீலிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் ஸ்ரேயாஸ் விஜய் ஹசாரே தொடரில் ஆடி தனது உடற்தகுதியை நிரூபித்ததோடு, அரைசதமும் அடித்தார். இத்துடன் ருதுராஜ்-க்கு இனி வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்துத் தனது யூடியூப் சேனலில் பேசிய ராபின் உத்தப்பா, இந்திய கிரிக்கெட் தேர்வில் நிலவும் பாரபட்சத்தைச் மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.
"நண்பா, இதையெல்லாம் ஜீரணித்துக் கொள்வதே கடினமாக இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் இருப்பது என்பது எப்போதும் ஒரு உயிருக்கான போராட்டம் போன்றதுதான். அதிலும் குறிப்பாக, மும்பை, டெல்லி அல்லது பஞ்சாப் ஆகிய இந்த மூன்று பெரிய மாநிலங்களிலிருந்து நீங்கள் வரவில்லை என்றால், நிலைமை இன்னும் மோசம்.
நீங்கள் இந்த மாநிலங்களைச் சாராதவர் என்றால், அணியில் இடம்பிடிக்கத் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்க வேண்டும். உங்களை நீங்களே ஒவ்வொரு முறையும் உந்தித் தள்ளிக் கொண்டே இருக்க வேண்டும் " என்று உத்தப்பா வேதனையுடன் கூறினார்.
மேலும் அவர் ருதுராஜுக்கு ஆலோசனை கூறுகையில், "இது போன்ற சூழலில் மனதளவில் வலிமையாக இருப்பது அவசியம். நமக்கு நடக்கும் விஷயங்களில் உள்ள நன்மையை மட்டுமே பார்க்க வேண்டும். இது மிகவும் கடினம்தான், ஆனாலும் தொடர்ந்து போராடுவதைத் தவிர வேறு வழியில்லை" என்று தெரிவித்தார்.
2022-ல் ஒருநாள் போட்டியில் அறிமுகமான ருதுராஜ், இதுவரை 9 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 228 ரன்கள் எடுத்துள்ளார். தொடர்ந்து சீரான வாய்ப்புகள் வழங்கப்படாததே அவரது இந்தத் தடுமாற்றத்திற்குக் காரணம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொதித்து வருகின்றனர். மும்பை லாபி ஆதிக்கம் செலுத்துவதாக அடிக்கடி எழும் விமர்சனங்களுக்கு, உத்தப்பாவின் இந்தக் கருத்து மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.