IND vs NZ: அம்பயரே ரொம்ப தப்பு.. எகிறிய ரோஹித்.. ஓடி வந்த கோலி.. அனல் பறந்த சம்பவம்.. என்ன நடந்தது?
பெங்களூர் : நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அம்பயருடன் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களும், நியூசிலாந்து அணி 402 ரன்கள் எடுத்தன.
முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 356 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. மிகவும் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி 462 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி நியூசிலாந்து அணியை விட 106 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது. நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் என்ற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

நான்காம் நாள் அன்று போட்டியில் 25 நிமிடங்கள் மீதமிருந்த நிலையில் அம்பயர்கள் போட்டியை நிறுத்தினர். டெஸ்ட் போட்டியில் ஒரு நாளின் கடைசி பத்து ஓவர்கள் பந்து வீசும் அணியால் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படும். ஏனெனில், அந்த சமயத்தில் தான் விக்கெட் எளிதாக கிடைக்கும். அதை பயன்படுத்தி இந்திய அணி, நியூசிலாந்து அணியின் சில விக்கெட்களை வீழ்த்தலாம் என திட்டமிட்டு இருந்தது.
ஆனால், அதற்கு நேர் மாறாக அம்பயர்கள் 25 நிமிடங்களுக்கு முன்பாக போட்டியை நிறுத்தியதால் கேப்டன் ரோஹித் சர்மா அதிருப்தி அடைந்தார். அப்போது மழை பெய்வது போன்ற ஒரு சூழ்நிலை நிலவியது. வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. அதனால் மைதானத்தில் வெளிச்சம் சரியாக இல்லை என்ற காரணத்தால் அம்பயர்கள் போட்டியை நிறுத்தி இருந்தனர்.
அப்போது ரோஹித் சர்மா அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மறுபுறம் விராட் கோலி அம்பயரிடம் மழை வரும் வரை போட்டியை நடத்தலாம் என சொன்னார். ஆனால், அம்பயருடன் இந்திய வீரர்கள் விவாதித்துக் கொண்டிருந்த அடுத்த ஐந்து நிமிடத்தில் மழை பெய்யத் தொடங்கிவிட்டது.
அதனால், வேறு வழியின்றி இந்திய வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர். நான்காம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு பந்துகளை மட்டுமே சந்தித்து இருந்தது. இந்த நிலையில் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 107 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும் என்ற நிலையில் உள்ளது.


Click it and Unblock the Notifications