பார்க்க பருமனாக இருப்பார் ஆனா.. 450 பந்துகள் கூட நின்று ஆடுவார்.. சூர்யகுமார் யாதவ் ஓபன் டாக்
பெங்களூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் அடித்த இந்திய வீரர் சர்ஃபராஸ் கான் குறித்து சூர்யகுமார் யாதவ் மனம் திறந்து பேசி இருக்கிறார். சர்ஃபராஸ் கான் பார்க்க பருமனாக இருந்தாலும் 450 பந்துகள் வரை நின்று பேட்டிங் செய்வார் என சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின் நியூசிலாந்து அணி 402 ரன்கள் சேர்த்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் யாரும் எதிர்பாராத வகையில் இந்திய அணி 462 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் என்ற சிறிய இலக்கை நிர்ணயித்தது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பு இல்லை என கருதப்பட்ட நிலையில் சர்ஃபராஸ் கான் 150 ரன்கள் சேர்த்தார். அவருடன் கூட்டணி அமைத்து ஆடிய ரிஷப் பண்ட் 99 ரன்கள் சேர்த்தார்.
இவர்களது அதிரடி ஆட்டத்தால் மட்டுமே இந்திய அணியால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க முடிந்தது. இந்த நிலையில் சர்ஃபராஸ் கான் பற்றி சூர்யகுமார் யாதவ் பேசுகையில் அவரது உடலை பருமனாக இருப்பதாக பலரும் சுட்டிக்காட்டுவது பற்றி வெளிப்படையாகவே பேசி இருக்கிறார்.
"சர்பராஸ் கானின் உடல் அமைப்பு சற்று பருமனாக இருக்கலாம். ஆனால், அவரை 450 பந்துகள் வரை நின்று பேட்டிங் செய்ய சொன்னாலும், இரட்டை சதம், முச்சதம், பெரிய சதம் அடிக்க சொன்னாலும் அதை அவர் செய்வார். அதற்கான திறமை அவரிடம் உள்ளது. இந்திய அணிக்கும் இதுபோல பெரிய சதம் அடிக்கும் வீரர் மற்றும் போட்டியை மாற்றும் வீரர் தேவை என்று நினைக்கிறேன்."
"அவர் போட்டி நடக்கும் அன்று கூட பயிற்சி செய்ய தவற மாட்டார். போட்டி இருந்தால் வீடியற்காலை 5 மணிக்கு எழுந்து தனது வீட்டுக்கு அருகே ஒரு மணி நேரம் பயிற்சி செய்த பின்னரே அணியின் பேருந்தில் ஏறுவார். போட்டி முடிந்தவுடன் அருகில் இருக்கும் மைதானத்திற்கு சென்று மீண்டும் பேட்டிங் செய்ய செல்வார்." என்று குறிப்பிட்டார் சூர்யகுமார் யாதவ்.


Click it and Unblock the Notifications