விராட் கோலி மாதிரி அல்ல.. சர்ஃபராஸ் கானால் நாள் முழுக்க பேட்டிங் செய்ய முடியும்.. முகமது கைஃப்!
பெங்களூர்: விராட் கோலியை போல் ஃபிட்னஸ் இல்லையென்றாலும், சர்ஃபராஸ் கானால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேட்டிங் செய்ய முடியும் என்று இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டு என்பதே அனைவரையும் உள்ளடக்கியது தான் என்று கூறியுள்ள அவர், சர்ஃபராஸ் கானின் சதத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 107 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணியை இன்னிங்ஸ் தோல்வியடைய வைக்க வேண்டும் என்று நியூசிலாந்து அணி வீரர்கள் தீவிரமாக போராடினர். ஆனால் 2வது இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மேன்களின் ஆட்டம் அபாரமாக இருந்தது.

குறிப்பாக இளம் வீரர் சர்ஃபராஸ் கான் ஸ்பின்னர்களையும், வேகப்பந்துவீச்சாளர்களையும் பொளந்து கட்டினார். எந்த பவுலரை நினைத்தும் கவலை கொள்ளாமல், ரன்கள் குவிக்க முடியும் என்று கருதிய பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பி கொண்டே இருந்தார். அப்பர் கட், கட் ஷாட், ஸ்ட்ரைட் டிரைவ், கவர் டிரைவ் என்று சர்ஃபராஸ் கானின் ஷாட்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றது.
சிறப்பாக ஆடிய அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவ்யு செய்தார். மொத்தமாக 195 பந்துகளில் 3 சிக்ஸ், 18 பவுண்டரி உட்பட 150 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலமாக இந்திய அணியில் சர்ஃபராஸ் கான் நிரந்தர இடத்தை பிடித்துவிட்டார் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அழுத்தமான சூழலில் சிறப்பாக ஆடிய சர்ஃபராஸ் கானுக்கு முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் பேசுகையில், சர்ஃபராஸ் கான் அவரின் வாழ்க்கையில் ஏராளமான கடுமையான சூழல்களை சந்தித்தவர். குழந்தைப் பருவம் அவருக்கு சிறப்பாக அமையவில்லை. ஃபிட்னஸ் விவகாரத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்துவிட்டார்.. ரஞ்சி டிராபியில் திடீரென உத்தரப் பிரதேச அணிக்காக விளையாடி பின்னடைவை சந்தித்தார்.
ஆனால் எவ்வளவு மோசமான சூழலாக இருந்தாலும், கம்பேக் கொடுப்பதை அவர் நிறுத்தவில்லை. இராணி கோப்பையில் அவர் இரட்டை சதம் விளாசியதால், அவரை இந்திய அணி பெஞ்சில் அமர வைத்திருந்தது. அது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. அதேபோல் ஃபிட்னஸ் பிரச்சனை காரணமாக ஒரு போதும் சர்ஃபராஸ் கானை வெளியில் அமர வைக்கக் கூடாது என்று தொடர்ச்சியாக கூறி வந்துள்ளேன்.
ஏனென்றால் சர்ஃபராஸ் கானுக்கு ஜிம்மில் தயார் செய்யும் உடலமைப்பு கிடையாது. ஆனால் அவரால் ஒருநாள் முழுக்க பேட்டிங் செய்ய முடியும். கிரிக்கெட் விளையாட்டு என்பதே அனைவரையும் உள்ளடக்கியது தான் என்று தெரிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சர்ஃபராஸ் கான் அதிரடியாக விளையாடி வருவது இந்திய அணிக்கும் சாதகமாக அமைந்துள்ளது. குறிப்பாக ஸ்பின்னர்களை அவர் அசால்ட்டாக கையாள்வது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications