எல்லை மீறிய சர்ஃபராஸ் கான்.. நியூசிலாந்து வீரர் புகாரால் கொதித்த ரோஹித்.. எச்சரித்த அம்பயர்
மும்பை: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சர்ஃபராஸ் கான் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்து அம்பயர்கள் அவரை எச்சரித்தனர். அதைக் கண்டு ஓடி வந்த கேப்டன் ரோஹித் சர்மா அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் அம்பயரிடம் புகார் அளித்ததே இந்த சம்பவத்துக்கு காரணமாக அமைந்தது. என்ன நடந்தது?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஆடி வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று துவங்கியது. நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் டாம் லாபம் 28 ரன்களுக்கும், டெவான் கான்வே 4 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர்.

ரச்சின் ரவீந்திரா 5 ரன்கள் எடுத்த ஆட்டம் இழந்தார். அடுத்து வில் யங் மற்றும் டேரில் மிட்செல் இணைந்து ரன் சேர்த்து வந்தனர். 32 வது ஓவரின் முடிவில் டேரில் மிட்செல் அம்பயரிடம் புகார் அளித்தார். சர்ஃபாரஸ் கான் ஷார்ட் லெக் திசையில் ஃபீல்டிங் நின்று இருந்தபோது, டேரில் மிட்செல் கவனத்தை திசை திருப்பும் வகையில் இடைவிடாமல் பேசிக் கொண்டே இருந்தார்.
அதனால், பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை என மிட்செல் அம்பயரிடம் புகார் அளித்தார். இதை அடுத்து அம்பயர் சர்ஃபராஸ் கானை அழைத்து எச்சரித்தார். அப்போது அம்பயர் அருகே வந்த கேப்டன் ரோஹித் சர்மா, "என்ன விஷயம்?" என விசாரித்தார். பின்னர் சர்ஃபராஸ் கான் மீது எந்த தவறும் இல்லை என வாதிட்டார்.
அதன் பின் டேரில் மிட்செல்லை சந்தித்து என்ன பிரச்சனை? என்று கேட்டார். அப்போது டேரில் மிட்செல் ஆக்ரோஷமாக பதில் அளித்தார். அதனால் ஆடுகளத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் சர்ஃபராஸ் கான் அமைதியானார். அதன் பின்பு நிலையாக ஆடிய டேரில் மிட்செல் அரைசதம் கடந்து 82 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
வில் யங் 71 ரன்கள் சேர்த்து இருந்தார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள் எடுத்தது. ரவீந்திர ஜடேஜா ஐந்து விக்கெட்களும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்களும் ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.


Click it and Unblock the Notifications