மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் தங்களுடைய வாழ்நாளில் மிகவும் முக்கியமான போட்டி ஒன்றில் விளையாடுகின்றனர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்தியாவின் கதவு தேடி தற்போது வந்திருக்கிறது.
இதற்கு முதல் தடையாக தற்போது இருப்பது நியூசிலாந்து தான். நியூசிலாந்தை வீழ்த்தினால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு சென்று விடும். இந்த நிலையில் இந்தியாவுக்கு வெற்றி தேவை என்றால் நமது அணியின் நட்சத்திர விராட் கோலி மிகப்பெரிய ஸ்கோர் ஒன்றை அடிக்க வேண்டும்.

ஆனால் அரை இறுதியில் விராட் கோலி இதுவரை 10 ரன்களை கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலி எவ்வாறு செயல்பட்டு இருக்கிறார் என்பதை தற்போது பார்க்கலாம். நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் எதிராக விராட் கோலி 145 ரன்கள் அடித்திருக்கிறார்.
ஸ்ட்ரைக் ரேட் 105 என்ற அளவில் இருக்கிறது. எனினும் அவர் மூன்று முறை ஆட்டம் இழந்து இருக்கிறார். இதேபோன்று டிம் சவுதிக்கு எதிராக விராட் கோலி 205 ரன்கள் அடித்திருக்கிறார். ஆறுமுறை ஆட்டம் இழந்திருக்கிறார். 101 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரேட் இருக்கிறது. இதேபோன்று மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான லோகி பெகுர்சனுக்கு எதிராக 68 ரன்கள் அடித்து ஒருமுறை ஆட்டம் இழந்திருக்கிறார்.
ஆனால் ஸ்ட்ரைக் ரேட் 130 என்ற அளவில் இருக்கிறது. நியூசிலாந்து பந்து வீச்சாளர்களிலேயே மிச்சல் சாட்னரிடம் மட்டும்தான் விராட் கோலி தடுமாறி இருக்கிறார். 164 ரன்கள் அடித்து மூன்று முறை ஆட்டம் இழந்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் வெறும் 69 என்ற அளவில் தான் இருக்கிறது.
இதனால் விராட் கோலி நாளை ஆட்டத்தில் முதலில் பொறுப்பாக விளையாடிவிட்டு பிறகு அதிரடியாக விளையாடி கடைசி வரை நின்று சதம் அடித்தால் அது இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த முடியும். தோல்வியே தழுவாத இந்திய அணி நாளைய போட்டியிலும் வெற்றி பெற்றால் தொடர்ந்து பத்து போட்டிகளில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.