இந்தூர்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் இருக்க, நாளை (ஞாயிறு) இந்தூரில் நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டியில் வெல்லும் அணியே கோப்பையை கைப்பற்றும். இந்த நிலையில், போட்டி நடக்கும் இந்தூர் நகருக்கு வந்திறங்கிய இந்திய கேப்டன் சுப்மன் கில், தன்னுடன் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளைக் கொண்டு வந்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.

இந்தியாவிலேயே மிகவும் தூய்மையான நகரம் என்ற பெருமை இந்தூருக்கு உண்டு. ஆனால், சமீபத்தில் இந்தூரில் உள்ள சில பகுதிகளில் தண்ணீர் மாசுபட்டதால் சில உயிரிழப்புகள் ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உள்ளூர் மக்களே குடிநீர் விஷயத்தில் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இந்தச் செய்தி இந்திய அணி நிர்வாகத்தின் காதுகளுக்கும் எட்டியுள்ளது. இதனால் வீரர்களின் உடல்நலத்தில் எவ்வித கோளாறும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக உள்ளனர். இதன் காரணமாக, இந்திய ஒருநாள் அணி கேப்டன் சுப்மன் கில், தன்னுடன் ஒரு அதிநவீன தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை (Water Purifier) எடுத்து வந்துள்ளார். இதன் மதிப்பு சுமார் 3 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தாலும், கேப்டன் சுப்மன் கில் இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளத் தயாராக இல்லை. இந்த இயந்திரம் அவர் தங்கியுள்ள அறையிலேயே பொருத்தப்பட்டுள்ளது.
வழக்கமாக நாம் குடிக்கும் ஆர்.ஓ (RO) தண்ணீர் அல்லது சீல் வைக்கப்பட்ட பாட்டில் வாட்டரை, இந்த இயந்திரத்தில் ஊற்றினால், அது மீண்டும் ஒருமுறை பல கட்டங்களாகச் சுத்திகரிக்குமாம். தண்ணீரில் உள்ள மிக நுண்ணிய கிருமிகள் மற்றும் மாசுக்களை நீக்கக்கூடிய தொழில்நுட்பம் இதில் உள்ளதாகத் தெரிகிறது. ஹோட்டல் ஊழியர்களுக்குக் கூட இந்த மெஷின் பற்றிய முழு விவரம் தெரியவில்லை.
ஹோட்டல் மற்றும் ஹோல்கர் மைதானத்தில் வீரர்களுக்காகச் சிறந்த தரத்திலான குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சுப்மன் கில்லின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சமீபத்திய தண்ணீர் மாசு சம்பவத்தின் எதிரொலியா அல்லது அவரது வழக்கமான சுகாதார நடவடிக்கையா என்பது குறித்து இந்திய அணியின் மீடியா மேனேஜர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இதற்கிடையில், மூன்றாவது ஒருநாள் போட்டி குறித்துப் பேசிய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், "அணியின் சூழல் மிகச் சிறப்பாக உள்ளது. கடந்த தோல்வியைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. டிரெஸ்ஸிங் ரூம் கலகலப்பாகவே இருக்கிறது. சீனியர் வீரர்கள் நல்ல ஆலோசனைகளை வழங்குகிறார்கள். நாளைய போட்டியில் வெல்வோம்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.