ராய்ப்பூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இப்போட்டியில் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இருப்பினும், அவரது ஆட்டம் குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டல் பாராட்டு கலந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இஷான் கிஷன் 73 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த விதம் குறித்து விமர்சனம் செய்த சைமன் டல், "இஷான் கிஷன் மிக அற்புதமாக விளையாடினார். ஆனால் அவர் இந்த இன்னிங்ஸை ஒரு பெரிய சதமாக மாற்றியிருக்க வேண்டும். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடிக்கும் வல்லமை படைத்தவர் அவர். அப்படிப்பட்ட ஒரு வீரர், களத்தில் நிலைத்து நின்று ஆடத் தொடங்கிய பிறகு, அதனை சதமாக மாற்றாமல் விட்டது சற்று ஏமாற்றமே" என்று தெரிவித்துள்ளார். இஷான் கிஷனிடம் அபாரமான ஆற்றல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில் இஷான் கிஷனின் ஆட்டம் இந்திய அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் அவர் விளக்கினார். "அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்தனர். 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற இக்கட்டான நிலையில், இஷான் கிஷன் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களைத் தாக்கி ஆடினார். இது எதிரணிக்கு உடனடியாக நெருக்கடியை ஏற்படுத்தியது. இஷான் கிஷன் ஒருமுனையில் அதிரடி காட்டியதால், கேப்டன் சூர்யகுமார் யாதவ் நிதானமாகத் தனது இன்னிங்ஸை கட்டமைக்க முடிந்தது" என்று சைமன் டல் கூறினார்.
இந்திய அணியின் பேட்டிங் ஆழம் குறித்து வியந்து பேசிய சைமன் டல், "இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் வலுவாக உள்ளது. கடந்த போட்டியில் ஜொலித்த அபிஷேக் சர்மா இமுறை ஏமாற்றினார். ஹர்திக் பாண்டியா மற்றும் ரிங்கு சிங் போன்ற சிக்ஸர் மன்னர்களுக்குப் பேட்டிங் செய்ய வாய்ப்பே கிடைக்கவில்லை. அவர்கள் களமிறங்காமலேயே இந்திய அணி இவ்வளவு பெரிய ஸ்கோரை எட்டியது அந்த அணியின் அசுர பலத்தைக் காட்டுகிறது" என்றார்.
2026 டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு இந்திய அணி சரியான பாதையில் செல்வதாக அவர் கணித்துள்ளார். "ஒருநாள் அணியிலிருந்து இந்த டி20 அணி முற்றிலும் மாறுபட்டுள்ளது. இளம் வீரர்கள் மற்றும் அனுபவ வீரர்கள் கலந்த கலவையாக இது உள்ளது. விக்கெட்டுகள் விழுந்தாலும் கவலைப்படாமல், தொடர்ந்து எதிரணியைத் தாக்கி ஆடும் மனநிலை இந்த அணியிடம் உள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் வீரர்கள் மிகவும் உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் காணப்படுகிறார்கள்" என்று சைமன் டல் தனது கருத்தை பதிவு செய்தார்.