IND vs NZ - இந்திய மகளிர் அணி அபார வெற்றி.. நியூசி.யை பழித் தீர்த்தது.. ஸ்மிருதி மந்தானா சாதனை சதம்
அகமதாபாத் : நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மகளிர் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது.
இதன் மூலம் டி20 உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக அடைந்த தோல்விக்கு இந்திய மகளிர் அணி பழி தீர்த்துக் கொண்டது. மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து மகளிர் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

இதில் முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வென்றது. இதனை அடுத்து தொடரை தீர்மானிக்கக்கூடிய மூன்றாவது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் புரோக் ஹாலிடே அபாரமாக விளையாடி 86 ரன்கள் சேர்க்க ஜார்ஜியா 39 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் நியூசிலாந்து மகளிர் அணி 49.5 ஓவர் முடிவில் 232 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய வீராங்கனை தீப்தி சர்மா அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிரியா மிஸ்ரா இரண்டு விக்கெட் எடுத்தார். இதனை அடுத்து 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களம் இறங்கியது.
தொடக்க வீராங்கனையாக விளையாடிய ஸ்மிருதி மந்தானா அபாரமாக விளையாடி நங்கூரம் போட்டு களத்தில் நின்றார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபக்கம் ஸ்மிருதி மந்தானா அதிரடி காட்டினார். ஷாபாலி வர்மா 12 ரன்களிலும், யாஷிகா பாட்டியா 35 ரன்களிலும் வெளியேற கேப்டன் ஹர்மன் பிரித் கவுர் அபாரமாக விளையாடி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நின்று 59 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தானா 122 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த இந்திய வீராங்கனை மித்தாலி ராஜின் ரெக்கார்டு ஸ்மிருதி மந்தானா முறியடித்திருக்கிறார். தற்போது ஸ்ருதி மந்தானா எட்டு சதம் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி 44.2 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி கைப்பற்றி இருக்கிறது.


Click it and Unblock the Notifications