மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்களை பிசிசிஐ செய்துள்ளது. காயம் காரணமாக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தொடரிலிருந்து விலகியுள்ளார். அதேசமயம், சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 அணியில் மீண்டும் இடம்பிடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர்.
வரும் 21-ம் தேதி நாக்பூரில் முதல் டி20 போட்டி தொடங்கவுள்ள நிலையில், அணியில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நடந்தபோது, பந்துவீசும் சமயத்தில் வாஷிங்டன் சுந்தருக்கு விலா எலும்புப் பகுதியில் திடீரென வலி ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில், தசைப்பிடிப்பு இருப்பது உறுதியானது.

இதனையடுத்து அவர் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அடுத்து நடைபெற இருக்கும் டி20 தொடரிலிருந்து சுந்தர் முழுமையாக விலகியுள்ளார். மேல் சிகிச்சைக்காக அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு (NCA) செல்லவுள்ளார். அவருக்குப் பதிலாகச் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னாய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இளம் வீரர் திலக் வர்மாவும் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். விஜய் ஹசாரே ட்ராபியின் போது வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அவரும் டி20 தொடரில் பங்கேற்க முடியாது.
திலக் வர்மாவுக்குப் பதிலாக, முதல் மூன்று டி20 போட்டிகளுக்கு மட்டும் ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. கடைசியாக 2023-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடந்த டி20 போட்டியில் விளையாடிய ஸ்ரேயாஸ், சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டி20 ஜெர்சியை அணியவுள்ளார். இது அவரது ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்)
அபிஷேக் சர்மா
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்)
ஸ்ரேயாஸ் ஐயர் (முதல் 3 போட்டிகளுக்கு மட்டும்)
ஹர்திக் பாண்டியா
சிவம் துபே
அக்சர் படேல் (துணை கேப்டன்)
ரிங்கு சிங்
ஜஸ்பிரித் பும்ரா
ஹர்ஷித் ராணா
அர்ஷ்தீப் சிங்
குல்தீப் யாதவ்
வருண் சக்கரவர்த்தி
இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்)
ரவி பிஷ்னாய்.
டி20 உலகக்கோப்பை நெருங்கி வரும் வேளையில், ஸ்ரேயாஸ் ஐயருக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தினால் டி20 உலகக்கோப்பையிலும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.