நாக்பூர்: இந்திய டி20 கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றியவர் சூர்யகுமார் யாதவ். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை விரட்டும் அவரது தனித்துவமான பேட்டிங் முறை இந்திய அணிக்கு புதிய உத்வேகத்தை அளித்தது. தற்போது இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்கும் சூர்யகுமார் யாதவ், தனது 100-வது சர்வதேச டி20 போட்டியில் இன்று நாக்பூரில் நியூசிலாந்துக்கு எதிராகக் களமிறங்குகிறார்.
ரோஹித் சர்மாவுக்குப் பிறகு கேப்டன் பொறுப்பை ஏற்ற சூர்யா, தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் இந்தியா 82% வெற்றி விகிதத்துடன் அசத்தி வருகிறது. குறிப்பாக 2025 ஆசியக் கோப்பையை வென்று கொடுத்தது அவரது கேப்டன்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய மகுடம்.

ஆனால், கேப்டனாக ஜொலிக்கும் சூர்யாவால், பேட்ஸ்மேனாகப் பழையபடி மிரட்ட முடியவில்லையே என்பதுதான் ரசிகர்களின் கவலை. கடந்த ஆண்டில் சூர்யா விளையாடிய 22 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அவரது சராசரி 14-க்கும் குறைவாகச் சரிந்துள்ளது. நீண்ட காலம் ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் 1 இடத்திலிருந்த அவர், தற்போது ரன்களுக்காகத் திணறி வருகிறார்.
தனது ஃபார்ம் குறித்த விமர்சனங்களுக்கு நாக்பூர் செய்தியாளர் சந்திப்பில் சூர்யா பதிலளித்தார்: "நான் ரன்கள் எடுக்கத் திணறுவது உண்மைதான். ஆனால் அதற்காக என் பேட்டிங் ஸ்டைலை மாற்றிக்கொள்ள மாட்டேன். கடந்த 3-4 ஆண்டுகளில் எனக்கு எது வெற்றியைத் தந்ததோ, அதையே இப்போதும் பின்பற்றுவேன். இது ஒரு குழு விளையாட்டு, அணி வெற்றி பெற்றால் நான் மகிழ்ச்சி அடைவேன்."
ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோருக்குப் பிறகு 100 டி20 போட்டிகளில் விளையாடும் 4-வது இந்திய வீரர் என்ற பெருமையை இன்று சூர்யா பெறுகிறார். இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் 2026 டி20 உலகக்கோப்பை தொடங்கவுள்ள நிலையில், 'மிஸ்டர் 360' தனது பழைய அதிரடி ஆட்டத்திற்குத் திரும்புவது இந்திய அணியின் வெற்றிக்கு மிக அவசியமானது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 100-வது போட்டியில் சூர்யா சதமடித்து ஃபார்முக்கு வருவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.