அகமதாபாத்: நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ள 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கு முன்னதாக நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற வலைப்பயிற்சியில் இந்திய அணியின் பந்துவீச்சுத் தேர்வில் மாற்றம் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. குறிப்பாக, சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியின் இடம் பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.
வழக்கமாக இந்திய அணியின் வலைப்பயிற்சியில் முதலில் பந்துவீசும் வருண் சக்கரவர்த்தி, நேற்றைய பயிற்சியின்போது ஓரமாக நின்று கொண்டிருந்தார். அவருக்குப் பதிலாக இடதுகை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீண்ட நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் வருண் சக்கரவர்த்தி, இந்தத் தொடரின் சூப்பர் 8 சுற்றிலிருந்தே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அவர் 4 ஓவர்களில் 64 ரன்களை வாரி வழங்கினார். இது அவரது டி20 வரலாற்றிலேயே மிக மோசமான பந்துவீச்சாக அமைந்தது. எதிரணி பேட்ஸ்மேன்கள் அவரது பந்துவீச்சை எளிதாகக் கணித்து விளையாடுவதால், இறுதிப்போட்டியில் அவருக்குப் பதிலாகக் குல்தீப் யாதவ் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. குல்தீப் யாதவ் இந்தத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய ஒரே ஒரு போட்டியில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்துப் பேசிய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், வருண் சக்கரவர்த்தியின் தன்னம்பிக்கை உடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். "பெரிய அணிகளுக்கு எதிராக வருண் தொடர்ந்து திணறுகிறார். அகமதாபாத் மைதானத்தின் எல்லைகள் பெரியது என்பதால், அங்கு குல்தீப் யாதவ் பந்துவீசுவது அணிக்குக் கூடுதல் பலம் சேர்க்கும். தட்டையான ஆடுகளங்களிலும் பந்தைத் திருப்பும் வல்லமை குல்தீப்பிற்கு உண்டு." என்று அவர் இந்திய அணி நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மற்றொரு புறம், ஃபார்மில் இல்லாத தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் இடமும் கேள்விக்குறியாகியுள்ளது. அவரும் நேற்று சுழற்பந்து வீச்சுக்கு எதிராகத் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். அவரை நீக்கிவிட்டு ரிங்கு சிங்கை சேர்க்க வேண்டும் என்றும், இஷான் கிஷனைத் தொடக்க வீரராகக் களமிறக்க வேண்டும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் அபிஷேக் சர்மா மீது வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாக, பேட்டிங் வரிசையில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது. ஆனால் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் உள்ளே வர வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் அல்லது வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.
