திலக் வர்மாவுக்கு அவசர சிகிச்சை.. இந்திய அணியில் இருந்து நீக்கம்.. உலகக்கோப்பையில் ஆடுவது சந்தேகம்
ராஜ்கோட்: டி20 உலகக் கோப்பைத் தொடர் தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய இளம் வீரர் திலக் வர்மாவுக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், அவர் அடுத்து நடைபெற உள்ள நியூசிலாந்து தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளார். உலகக் கோப்பையிலும் அவர் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடுவதற்காகத் திலக் வர்மா குஜராத் மாநிலம் ராஜ்கோட் சென்றிருந்தார். புதன்கிழமை காலை உணவை முடித்த சிறிது நேரத்தில் அவருக்குக் கடுமையான வயிற்று வலி மற்றும் உடல் உபாதை ஏற்பட்டது.

இதனையடுத்து அவர் உடனடியாக ராஜ்கோட்டில் உள்ள கோகுல் மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு விரைப்பையில் ரத்த ஓட்டம் தடைபடும் டெஸ்ட்டிகுலார் டார்ஷன் (Testicular torsion) என்ற பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். இதற்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இது குறித்துப் பேசிய சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜெய்தேவ் ஷா, "திலக் வர்மாவுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார். விரைவில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" என்று தெரிவித்தார்.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும், அவர் குணமடைந்து மீண்டும் களத்திற்குத் திரும்ப 3 முதல் 4 வாரங்கள் வரை ஓய்வு தேவைப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால் இந்திய அணிக்கு இரண்டு பெரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
வரும் ஜனவரி 21-ம் தேதி நாக்பூரில் தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலிருந்து திலக் வர்மா முழுமையாக விலகியுள்ளார். அடுத்து உலகக் கோப்பைத் தொடர் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்குகிறது. அதற்குள் திலக் வர்மா முழு உடற்தகுதியை எட்ட முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
திலக் வர்மா சமீபகாலமாக டி20 போட்டிகளில் இந்திய அணியின் நங்கூரமாகச் செயல்பட்டு வருகிறார். 40 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 1183 ரன்களைக் குவித்துள்ளார். இவரது சராசரி 49.29 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 144.09 ஆகும்.
கடந்த செப்டம்பர் மாதம் நடந்த ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் குவித்து வெற்றி தேடித்தந்தவர் இவரே. திலக் வர்மா விலகியுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக மாற்று வீரராக யாரைத் தேர்வு செய்வது என்பதில் பிசிசிஐ (BCCI) ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.


Click it and Unblock the Notifications