Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ போட்டியில் வெடித்த இந்தி - தமிழ் சர்ச்சை.. லைவ் மேட்ச்சில் 'நோஸ் கட்' செய்த வருண்

வதோதரா: இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நடந்து கொண்டிருந்த போது, வர்ணனை இந்தி அறையில் நடந்த ஒரு விவாதம் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. "இந்திதான் தேசிய மொழி" என்று போகிற போக்கில் உண்மைக்குப் புறம்பான கருத்தைச் சொன்ன முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கருக்கு, சக வர்ணனையாளரும், சென்னை பையனுமான வருண் ஆரோன் கொடுத்த தரமான பதிலடி இணையத்தை கலக்கி வருகிறது.

நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த 11-வது ஓவரின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ஆடுகளத்தில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீசிக் கொண்டிருக்க, விக்கெட் கீப்பரான கே.எல். ராகுல் அவருக்கு இந்தியில் சில ஆலோசனைகளை சத்தமாக கூறிக் கொண்டிருந்தார்.

IND vs NZ Varun Aaron and Sanjay Bangar involved in Hindi - Tamil debate During Live Commentary in Vadodara

இதைப் பார்த்துக் கொண்டிருந்த வர்ணனையாளர் வருண் ஆரோன், ஒரு எதார்த்தமான உண்மையைச் சொன்னார். "வாஷிங்டன் சுந்தருக்கு இந்தி அந்தளவுக்குத் தெரியாது. ராகுல் இந்தியில் சொல்வது அவருக்கு முழுமையாகப் புரியாமல் போக வாய்ப்புள்ளது" என்று தனது கருத்தைப் பதிவு செய்தார்.

வருண் ஆரோன் சொன்னதைக் கேட்டு சஞ்சய் பங்கர், "வருண், நீங்கள் வாஷிங்டன் சுந்தருக்கு வக்காலத்து வாங்குவது போல் தெரிகிறது" என்றார். அத்துடன் நிற்காமல், "தென்னிந்தியர்கள் எப்போதுமே தங்கள் பிராந்திய மொழிகள் மீதுதான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் இந்தி மிகவும் முக்கியம், ஏனென்றால் அதுதான் நம் தேசிய மொழி" என்று ஒரு அப்பட்டமான பொய்யை நேரலையில் அவிழ்த்துவிட்டார்.

சஞ்சய் பங்கர் இப்படிச் சொன்னதும் வருண் ஆரோன் சிரித்துக்கொண்டே அவருக்குப் பதிலடி கொடுத்தார். "நான் யாருக்கும் வக்காலத்து வாங்கவில்லை சஞ்சய். சுந்தருக்கு உண்மையாகவே இந்தி தெரியாது என்பதுதான் நிதர்சனம். கே.எல். ராகுலுக்கு கொஞ்சம் தமிழ் தெரியும், அவர் தமிழில் கூட பேசியிருக்கலாம்" என்று கூறினார்.

மேலும் ஒருபடி மேலே சென்று, "மைதானத்தில் கான்வே, நிக்கோல்ஸ் போன்ற வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ராகுல் ஆங்கிலத்தில் பேசினால் அவர்களுக்குப் புரிந்துவிடும். ஆனால், நமது உள்ளூர் மொழியில் (தமிழ்) பேசினால் அது எதிரணிக்கு புரியாத ஒன்றாக இருக்கும்" என்றும் வருண் ஆரோன் விளக்கம் அளித்தார்.

உண்மை என்ன?

சஞ்சய் பங்கர் போன்ற மூத்த முன்னாள் வீரர்கள் கூட, "இந்தி இந்தியாவின் தேசிய மொழி" என்று தவறான தகவலைப் பரப்புவது வருத்தத்துக்குரியது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இந்தியாவுக்கு என்று தேசிய மொழி (National Language) என எதுவும் கிடையாது. இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகியவை மத்திய அரசின் அலுவல் மொழிகள் மட்டுமே. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 22 மொழிகள் எட்டாவது அட்டவணையில் சமமாக மதிக்கப்படுகின்றன.

அப்படியிருக்க, வாஷிங்டன் சுந்தர் போன்ற ஒரு தமிழ் வீரரிடம், "இந்தி தெரிந்தால் தான் புரியும்" என்ற ரீதியில் பங்கர் பேசியதும், அதை தேசிய மொழி என்று சொன்னதும் அப்பட்டமான திணிப்பு என்றே ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர்.

ஜதின் சப்ருவின் சமாதானம்:

விவாதம் சூடுபிடித்ததை உணர்ந்த மற்றொரு வர்ணனையாளர் ஜதின் சப்ரு, "கிரிக்கெட்டுக்கு ஒரே மொழிதான்" என்று கூறி நிலைமையைச் சமாளிக்க முயன்றார். எது எப்படியோ, "இந்தி தெரியாது போடா" என்று சொல்லாமல் சொல்லி, வாஷிங்டன் சுந்தரின் நிலைமையை எடுத்துரைத்து, தமிழுக்கு ஆதரவாகப் பேசிய வருண் ஆரோனை தமிழ் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Story first published: Sunday, January 11, 2026, 17:13 [IST]
Other articles published on Jan 11, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+