நாக்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அபிஷேக் சர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோரின் அதிரடி ஆட்டம் ஒருபுறம் இருக்க, பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி படைத்த ஒரு புதிய சாதனை கிரிக்கெட் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இந்த போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முன்னணி பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் வனிந்து ஹசரங்கா ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் வருண் சக்கரவர்த்தி.

பொதுவாக ஒரு பந்துவீச்சாளர் டி20 போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தினாலே அது சிறப்பான பங்களிப்பாகக் கருதப்படும். ஆனால் வருண் சக்கரவர்த்தி களமிறங்கினாலே குறைந்தது இரண்டு விக்கெட்டுகளைத் தூக்கிவிடுகிறார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்தபட்சம் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில், அதிக முறை 2 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் வருண் சக்கரவர்த்தி இரண்டாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
வருண் சக்கரவர்த்தி இதுவரை 32 இன்னிங்ஸ்களில் பந்துவீசியுள்ளார். இதில் 20 இன்னிங்ஸ்களில் அவர் 2 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் அவரது 2 விக்கெட் வீழ்த்தும் சதவீதம் 62.5 ஆக உயர்ந்துள்ளது. அதாவது அவர் விளையாடும் 100 போட்டிகளில் சுமார் 63 போட்டிகளில் நிச்சயம் இரண்டு விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்துகிறார் என்று புரிந்து கொள்ளலாம்.
இந்தப் பட்டியலில் நேபாளத்தைச் சேர்ந்த சந்தீப் லாமிச்சான் 63.2 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி உள்ளார். இதில் சந்தீப் லாமிச்சான் வீழ்த்திய விக்கெட்கள் பெரும்பாலும் முழு உறுப்பினர் அல்லாத சிறிய நாடுகளின் அணிகளுக்கு எதிரானவை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம், வருண் சக்கரவர்த்தி இரண்டு டி20 உலகக்கோப்பைகள், ஆசிய கோப்பை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற பெரிய தொடர்கள், முக்கிய அணிகளுக்கு எதிராக இந்த சாதனையை செய்துள்ளார். வருண் சக்கரவர்த்தியின் இந்த அசுர வளர்ச்சியால், இந்தியாவின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் மற்றும் இலங்கையின் நட்சத்திர வீரர் வனிந்து ஹசரங்கா ஆகியோர் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சந்தீப் லாமிச்சானே: 63.2 சதவீதம் (68 இன்னிங்ஸில் 43 முறை)
வருண் சக்கரவர்த்தி: 62.5 சதவீதம் (32 இன்னிங்ஸில் 20 முறை)
குல்தீப் யாதவ்: 58.3 சதவீதம் (48 இன்னிங்ஸில் 28 முறை)
லோர்ன் பர்ன்ஸ்: 57.6 சதவீதம் (33 இன்னிங்ஸில் 19 முறை)
வனிந்து ஹசரங்கா: 56.7 சதவீதம் (90 இன்னிங்ஸில் 51 முறை)
நேற்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 239 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கித் துரத்தியது. அப்போது 4 ஓவர்கள் வீசிய வருண் சக்கரவர்த்தி 37 ரன்களை விட்டுக்கொடுத்து முக்கியமான 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நன்றாக விளையாடிக் கொண்டிருந்த டிம் ராபின்சன் (21 ரன்கள்) மற்றும் மார்க் சாப்மேன் (39 ரன்கள்) ஆகியோரை வெளியேற்றி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்த இரண்டு விக்கெட்டுகள் மூலமே அவர் மேலே குறிப்பிட்ட அந்தச் சாதனைப் பட்டியலில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
ஒரு மிஸ்டரி சுழற்பந்து வீச்சாளராக அணிக்குள் வந்த வருண் சக்கரவர்த்தி, தற்போது அணியின் நம்பிக்கையான விக்கெட் வேட்டைக்காரராக மாறியிருப்பது இந்திய ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.