பறந்த ஸ்டம்ப்.. விராட் கோலியின் கோபத்தை பார்த்து அரண்டு போன நெட் பவுலர்.. என்ன நடந்தது?
பெங்களூரு: விராட் கோலியின் கோபத்தை பார்த்து ஒரு உள்ளூர் வேகப் பந்துவீச்சாளர் மிரண்டு போன சம்பவம் நடந்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா மற்றும் வங்கதேச டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியின் வலைப் பயிற்சியில் பந்து வீச்சாளராக செயல்பட்டவர் குர்ஜப்நீத் சிங். 25 வயதான அவர் இந்திய வீரர்களுக்கு வலைப் பயிற்சியின் போது பந்து வீசினார்.
முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடந்த பயிற்சி முகாமில் விராட் கோலிக்கு குர்ஜப்நீத் சிங் பந்து வீசும் போது அந்த சம்பவம் நடந்தது. குர்ஜப்நீத் சிங் வீசிய பந்தில் விராட் கோலி பவுல்ட் அவுட் ஆகிவிட்டார். உள்ளூர் பவுலர் ஒருவரின் பந்தில் தான் அவுட் ஆகி, ஸ்டம்ப்பு பறந்ததை பார்த்த விராட் கோலி கடும் கோபம் அடைந்ததாகவும், அவர் முகம் ஆக்ரோஷமாக மாறியதாகவும் குர்ஜப்நீத் குறிப்பிட்டு இருக்கிறார்.

அவரை மீண்டும் பார்ப்பதற்கே தான் அஞ்சியதாகவும், ஆனால் அவர் வேறு ஒரு காரணத்துக்காக கோபத்தில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதுபற்றி குர்ஜப்நீத் சிங் பேசுகையில், "நான் கோலியை பவுல்ட் அவுட் செய்தேன். அதன் பின் நான் அவரை பார்த்தேன். அதன் பின் அவரை பார்க்கவே எனக்கு பயமாக இருந்தது. அவர் மிக, மிக கோபத்துடன் இருந்தார். அதன் பின்பு தான் அவர், தன் மீதே கோபத்தில் இருக்கிறார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்." என்றார்.
மேலும், "அதன் பின் கோலி ஒரு ஸ்ட்ரைட் டிரைவ் அடித்தார். பின் என்னை பார்த்து அவர் சிரித்தார். பின் அவர் என் அருகே வந்து, "பந்தில் எந்த நகர்வும் இல்லை என்றால் நீ பந்து வீசும் கோணத்தை மாற்றி "அரவுண்ட் தி விக்கெட்"டில் பந்து வீசு என்றார். அந்த கோணத்தில் வீசும் போது உனக்கு லேசான நகர்வு கிடைக்கும். அது பல பேட்ஸ்மேன்களை சிக்கலில் ஆழ்த்தும். என்று எனக்கு ஆலோசனை அளித்தார்." என்றார் குர்ஜப்நீத் சிங்.
இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. வங்கதேச டெஸ்ட் தொடரில் விராட் கோலி பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை. இந்த நிலையில், அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலாவது சதம் அடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications