வதோதரா: நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் "சேஸிங் கிங்" விராட் கோலி தனது விஸ்வரூபத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தி பல்வேறு சேஸிங் சாதனைகளை முறியடித்தார். அவரது சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 301 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, கோலியின் 93 ரன்கள் மற்றும் கடைசி நேரத்தில் ஹர்ஷித் ராணா, கே.எல். ராகுல் ஆகியோரின் பொறுப்பான ஆட்டம் வெற்றியைத் தேடித் தந்தது.
வதோதரா கோட்டாம்பி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்களைக் குவித்தது. பின்னர் 301 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 49 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 306 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி, சேஸிங்கில் தான் ஒரு "சக்கரவர்த்தி" என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். ரோகித் சர்மா 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த பிறகு களத்திற்கு வந்த கோலி, கேப்டன் சுப்மன் கில்லும் இணைந்து அணியை மீட்டெடுத்தார். விராட் கோலி 91 பந்துகளில் 93 ரன்கள் எடுத்தார். 8 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாசினார். துரதிர்ஷ்டவசமாக ஜேமிசன் பந்துவீச்சில் சதம் அடிக்கும் வாய்ப்பை 7 ரன்களில் நழுவ விட்டார்.
300 ரன்களுக்கு மேல் இலக்கை துரத்தும்போது விராட் கோலியின் புதிய சாதனை படைத்துள்ளார். இதில் 12 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர், 121.22 என்ற சராசரியுடன் 1091 ரன்கள் குவித்துள்ளார். இதில் 7 சதங்கள் மற்றும் 2 அரைசதங்கள் அடங்கும். அதாவது, இந்தியா 300 ரன்களைத் துரத்தி வெற்றி பெற்ற போட்டிகளில், கோலி சராசரியாக ஒரு சதமோ அல்லது சதத்திற்கு அருகிலோ அடிக்கிறார் என்பது வரலாறு.
ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 5 அல்லது அதற்கு மேற்பட்ட முறை 50+ ரன்களைக் குவிப்பது கோலிக்கு இது 5-வது முறையாகும். உலக கிரிக்கெட்டில் வேறு எந்த வீரரும் இத்தனை முறை இந்த சாதனையைச் செய்ததில்லை. கோலிக்கு அடுத்தபடியாக குயின்டன் டி காக், கேன் வில்லியம்சன் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் தலா 2 முறை மட்டுமே இதைச் செய்துள்ளனர்.
இளம் கேப்டன் சுப்மன் கில் 56 ரன்கள் குவித்து, விராட் கோலியுடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இதுவே இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் தன் பங்கிற்கு 47 பந்துகளில் 49 ரன்கள் விளாசினார்.
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் ரோஹித், கோலி, ஸ்ரேயாஸ், ஜடேஜா என 4 முக்கிய விக்கெட்டுகளைவீழ்த்தி இந்தியாவை ஒருகட்டத்தில் திணறடித்தார். இந்தியா 242 ரன்களுக்கு 5 விக்கெட் எனத் தடுமாறியது.
அப்போது, விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் மற்றும் ஹர்ஷித் ராணா ஜோடி சேர்ந்தனர். குறிப்பாக ஹர்ஷித் ராணா 23 பந்துகளில் 29 ரன்கள் விளாசி அழுத்தத்தைக் குறைத்தார். இறுதியில் இந்தியா 49-வது ஓவரில் வெற்றிக் கோட்டைத் தொட்டது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.