பெங்களூர்: நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே-வை பதற வைக்கும் வகையில் விராட் கோலி மற்றும் துருவ் ஜுரல் ஒரு காரியத்தில் ஈடுபட்டனர். அதனால், டெவான் கான்வே நீண்ட நேரம் பேட்டிங்கில் தடுமாறி 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். எனினும், நியூசிலாந்து அணி கடைசி நாள் அன்று சிறப்பாக பேட்டிங் செய்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது இந்திய அணி. இரண்டாம் நாள் அன்று நியூசிலாந்து அணி இந்த இலக்கை நோக்கி ஆடியது. முதல் சில ஓவர்கள் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. கேப்டன் டாம் லாதம் முதல் ஓவரிலேயே பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணி விரைவாக 10 விக்கெட்களை வீழ்த்த வேண்டும், அல்லது மழையால் போட்டி டிரா ஆக வேண்டும் என்ற இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இந்திய அணிக்கு முன் இருந்தன.

இந்த நிலையில், டாம் லாதம் ஆட்டமிழந்து சென்ற பின் வில் யங் மற்றும் டெவான் கான்வே ஜோடி சேர்ந்தனர். இவர்களில் டெவான் கான்வே, பும்ரா பந்துவீச்சில் பேட்டிங் செய்ய தடுமாறினார். விராட் கோலி மற்றும் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரல் மைதானத்தில் இருந்த விரிசலை அடிக்கடி சுட்டிக்காட்டிக் கொண்டே இருந்தனர்.
கான்வே முன்பு அதை தொடர்ந்து செய்தனர். அதை பார்த்தவர் பந்து அந்த விரிசலில் பட்டு வந்தால் பவுன்ஸ் ஆகலாம் அல்லது ஸ்விங் ஆகலாம் என்பதால் சற்று பதற்றத்திலேயே இருந்தார். அவரால் பும்ரா பந்துவீச்சில் ஒரு பந்தை கூட சரியாக அடிக்க முடியாத நிலை இருந்தது. இடையே ஒரே ஓவரில் இரண்டு ஃபோர் அடித்தாலும் அதுவும் தவறான ஷாட்டால் கிடைத்தது. பின்னரே பும்ரா பந்துவீச்சில் 17 ரன்கள் எடுத்த நிலையில் கான்வே ஆட்டம் இழந்தார்.
அதன் பின் இந்தியா தொடர்ந்து விக்கெட் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரச்சின் ரவீந்திரா மற்றும் வில் யங் சிறப்பாக பேட்டிங் செய்தனர். ரச்சின் 39 ரன்களும், வில் யங் 48 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தனர். நியூசிலாந்து அணி இந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.