IND vs NZ: 7 ரன்களில் 54வது சதத்தை தவறவிட்ட விராட் கோலி.. சச்சின் சாதனை சமன்
வதோரா: நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், நட்சத்திர வீரர் விராட் கோலி 7 ரன்களில் தன்னுடைய 54வது சதத்தை தவறவிட்டார். இதே போன்று நியூசிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் பட்டியலில் சச்சின் சாதனையை சமன் செய்துள்ளார். சச்சின் 1750 ரன்கள் சாதனையை42 போட்டிகளில் எட்டிய நிலையில், கோலி இந்த ரன்களை 34 போட்டிகளில் எட்டியுள்ளார்.
வதோதராவில் நடைபெற்ற முதல் இந்தியா-நியூசிலாந்து ஒருநாள் போட்டியில், சச்சினின் சாதனையை முறியடிக்க கோலிக்கு 94 ரன்கள் தேவைப்பட்டன. 301 ரன்கள் இலக்கை துரத்திய போது விராட் கோலி, 91 பந்துகளில் 93 ரன்கள் எடுத்தார். தனது அதிரடி ஆட்டத்தில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசிய அவர், ஷ்ரேயஸ் ஐயருடன் (47*) மூன்றாவது விக்கெட்டுக்கு 76 பந்துகளில் 77 ரன்களை சேர்த்தார்.

இந்தியா-நியூசிலாந்து ஒருநாள் போட்டிகளில் கோலியும் சச்சினும் தலா 1750 ரன்களுடன் இணைந்து அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் (1385 ரன்கள்) மற்றும் கேன் வில்லியம்சன் (1239 ரன்கள்) அவர்களுக்குப் பிறகு உள்ளனர். நியூசிலாந்துக்கு எதிராக அனைத்து நாடுகளின் ஒருநாள் போட்டிகளிலும் அதிக ரன் குவித்த ஒட்டுமொத்த சாதனையை ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (51 போட்டிகளில் 1971 ரன்கள்) வைத்துள்ளார். கோலியும் சச்சினும் இவருக்கு அடுத்த நிலையில் உள்ளனர்.
கோலி இந்தத் தொடரில் ஒரு சதம் அடித்தால், நியூசிலாந்துக்கு எதிராக ஏழு சதங்கள் அடித்த உலகின் முதல் பேட்ஸ்மேன் ஆவார். தற்போது, அவர் ரிக்கி பாண்டிங் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோருடன் தலா ஆறு சதங்களுடன் இணைந்து சமநிலையில் இருக்கிறார். இந்த ரெக்கார்டை அவர் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 93 ரன்கள் எடுத்திருந்த போது பிரஸ்வேல் அபாரமாக கேட்ச் பிடித்தார்.
நியூசிலாந்துக்கு எதிரான சச்சினின் சாதனையை சமன் செய்வதற்கு முன்னதாகவே, விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ரன்களை விரைவாக கடந்த உலகின் முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்திருந்தார். அவர் தனது 28,000-வது சர்வதேச ரன்னை வெறும் 624 இன்னிங்ஸ்களில் எட்டினார்.சச்சின் டெண்டுல்கர் இந்த மைல்கல்லை எட்ட 644 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டன. இலங்கையின் குமார் சங்ககாரா 28,000 ரன்களை அடைய 666 இன்னிங்ஸ்கள் எடுத்துக் கொண்டார்.


Click it and Unblock the Notifications