பெங்களூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் விராட் கோலி அதை பயன்படுத்தி டெஸ்ட் போட்டியில் மீண்டும் ஃபார்முக்கு வர திட்டமிட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆனால், அவரது எண்ணத்துக்கு எதிராக இந்த முதல் போட்டி நடைபெறுவதே சந்தேகமாக மாறி உள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. விராட் கோலிக்கு இது மிகவும் விருப்பமான மைதானம் ஆகும். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக இந்த மைதானத்தில் அவர் அதிக போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

சர்வதேச அளவிலும், உள்ளூர் போட்டிகளிலும் சேர்த்து சின்னசாமி மைதானத்தில் மட்டும் விராட் கோலி 106 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். குறிப்பாக 2012 ஆம் ஆண்டு ஒரு சம்பவம் நடந்தது. அப்போது விராட் கோலியின் டெஸ்ட் பேட்டிங் குறித்து விமர்சனம் இருந்தது. அப்போது அவரது டெஸ்ட் பேட்டிங் சராசரி 34 ஆக மட்டுமே இருந்தது.
இனி அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் அளிக்க வேண்டுமா? என்ற விவாதம் நடந்து கொண்டு இருந்தது. அப்போது இதே நியூசிலாந்து அணிக்கு எதிராக 2012 ஆம் ஆண்டு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி ஒரு சதம் மற்றும் அரை சதம் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். அங்கிருந்து தான் அவரது டெஸ்ட் பேட்டிங் ஏற்றத்தை சந்திக்கத் தொடங்கியது.
அவர் இந்திய டெஸ்ட் அணியில் இடத்தை இழக்கும் நிலையில் இருந்தபோது இதே சின்னசாமி மைதானம் தான் அவருக்கு உதவியது. 2020 முதல் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வருகிறார். இடையே 2023 ஆம் ஆண்டு இரண்டு சதம் மற்றும் இரண்டு அரை சதங்கள் அடித்து இருந்தார். அப்போது மட்டும் அவரது சராசரி அதிகமாக இருந்தது.
எனினும், 2024 ஆம் ஆண்டில் இதுவரை 6 இன்னிங்ஸ்களில் 157 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த ஆண்டு அவரது சராசரி 31 ஆக சரிந்து உள்ளது. மீண்டும் அவரது டெஸ்ட் பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருப்பதாக விமர்சனங்கள் எழத் தொடங்கி உள்ளன. இந்த ஆண்டு இதுவரை ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.
அடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது அதற்கு முன் விராட் கோலி டெஸ்ட்டில் தனது பழைய ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்ற எண்ணத்தில் சின்னசாமி மைதானத்தில் நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். இந்த மைதானத்தின் பவுண்டரி எல்லை சிறியது என்பதால் எளிதாக அதிக ஃபோர் மற்றும் சிக்ஸ் அடிக்கலாம் என அதற்கான பயிற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார்.
ஆனால், பெங்களூரில் கடுமையான மழை பெய்து வருவதால் அக்டோபர் 16 முதல் 20 வரை நடைபெற உள்ள இந்த முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வானிலை அறிக்கையில் போட்டியின் ஐந்து நாட்களிலும் கடுமையான மழை இருக்கும் எனவும், ஒவ்வொரு நாளும் 60 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதனால், இந்தப் போட்டி முழுமையாக ரத்தாகவும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், தனக்கு பிடித்தமான சின்னசாமி மைதானத்தில் பெரிய இன்னிங்ஸ் ஆடலாம் என்ற விராட் கோலியின் எண்ணம் ஈடேறுமா?