லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது மாற்றங்களுக்கான நேரம் வந்துவிட்டது என்று பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பனேசர் விராட் கோலி ஒருநாள் அணிக்கு தேவை இல்லை என்கிறே ரீதியில் பேசி இருக்கிறார். ஏற்கனவே, டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட கோலி, ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார்.
இந்த நிலையில், "வெள்ளை பந்து கிரிக்கெட்டில் (ஒருநாள் மற்றும் டி20) இந்திய அணிக்கு இனி விராட் கோலி தேவையில்லை; அவர் இல்லாதது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது" என்று மாண்டி பனேசர் கூறி இருக்கிறார். அதே சமயம், டெஸ்ட் போட்டிகளில் கோலி ஆடவேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார்.

சமீபத்தில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த மாண்டி பனேசர், இந்திய அணியின் தற்போதைய நிலை குறித்து அலசினார். அதில் அவர், "ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விராட் கோலி இல்லாவிட்டாலும் இந்திய அணியால் சமாளிக்க முடியும். அந்த ஃபார்மேட்டில் அவர் இல்லாத குறையே தெரியவில்லை. இளம் வீரர்கள் அந்த இடத்தை நிரப்பத் தயாராக உள்ளனர்.
ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை நிலைமை தலைகீழ். அங்கே விராட் கோலி இல்லாதது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. அவர் இல்லாத இந்திய டெஸ்ட் அணியிடம் அந்த பழைய வேகம் இல்லை, ஆக்ரோஷம் இல்லை. எதிரணியைப் பார்த்து மிரள வைக்கும் அந்த ஆக்ரோஷம் குறைந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்திய இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டாததற்குக் காரணத்தையும் போட்டுடைத்துள்ளார். "இந்திய இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் தயாராக இல்லை. அவர்களுக்கு ஐபிஎல் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசைதான் இருக்கிறது. 4 நாட்கள் வெயிலில் நின்று விளையாடும் ரஞ்சி டிராபி போன்ற கடினமான போட்டிகளில் அவர்களுக்கு நாட்டம் இல்லை.
டி20-யில் ஜொலித்தால் போதும், பெரிய ஒப்பந்தம் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். இதனால்தான் ரஞ்சி டிராபிக்கும், இந்திய டெஸ்ட் அணிக்கும் இடையே பெரிய இடைவெளி விழுந்துவிட்டது" என்று உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறார் மாண்டி பனேசர். இதே விஷயத்தை தான் சுனில் கவாஸ்கர், ஹர்பஜன் சிங் ஆகியோர் நீண்ட நாட்களாக கூறி வருகிறார்கள். ஆனால், பிசிசிஐ அதை கண்டு கொண்டதாக தெரியவில்லை.