ராஜ்கோட்: நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், விராட் கோலி ஆட்டமிழந்த விதம் கிரிக்கெட் ரசிகர்களின் பழைய காயத்தைக் கிளறும் வகையில் அமைந்தது. 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நடந்தது போலவே, இன்றும் ஒரு சம்பவத்தை மீண்டும் செய்து அதிர்ச்சியில் உறைந்தார் விராட் கோலி.
இந்தப் போட்டியில் ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 பேட்ஸ்மேன் என்ற ஐசிசி தரவரிசை மகுடத்துடன் களமிறங்கிய கோலி, பெரிய ஸ்கோர் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 23 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆட்டத்தின் 24-வது ஓவரை நியூசிலாந்து இளம் வீரர் கிறிஸ்டியன் கிளார்க் வீசினார்.

அந்த ஓவரின் 3-வது பந்து சற்றே தாழ்வாக வந்தது. அதைத் தடுக்க முயன்ற கோலியின் பேட்டில் பந்து பட்டு, 'இன்சைட் எட்ஜ்' ஆகி ஸ்டம்புகளைச் சிதறடித்தது. பந்து ஸ்டம்பை தாக்கியதை உணர்ந்த கோலி, தான் எப்படி அவுட் ஆனோம் என்பதை நம்ப முடியாமல் சில நொடிகள் கிரீஸிலேயே சிலையாக உறைந்து நின்றார். அவரது முகத்தில் தெரிந்த அந்த அதிர்ச்சி, அகமதாபாத் மைதானத்தை நினைவுபடுத்துவதாக இருந்தது.
சரியாகச் சொன்னால், 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் விராட் கோலி இதே பாணியில் தான் ஆட்டமிழந்தார். அன்று எப்படி பந்து இன்சைட் எட்ஜ் ஆகி ஸ்டம்பை பதம் பார்த்ததோ, அதே சம்பவம் இன்று ராஜ்கோட்டிலும் அரங்கேறியது.
அன்று கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் இதயம் எப்படி நொறுங்கியதோ, அதே நினைவுகளை இந்த விக்கெட் மீண்டும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள், "ஏன் கோலி மீண்டும் அந்த காயத்தை ஞாபகப்படுத்துறீங்க?" என்று பதிவிட்டு வருகின்றனர்.
இந்தப் போட்டியில் கோலிக்கு இரட்டை ஏமாற்றம் காத்திருந்தது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி தரவரிசையில் மீண்டும் 'நம்பர் 1' இடத்தைப் பிடித்தார். ஆனால் அந்த மகிழ்ச்சியுடன் ஆடிய முதல் இன்னிங்ஸிலேயே 23 ரன்களில் வெளியேறியது சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த போட்டிக்கு முன் தொடர்ந்து 5 ஒருநாள் போட்டிகளில் 50+ ரன்களை விளாசியிருந்தார் கோலி. இன்று மட்டும் அரைசதம் அடித்திருந்தால், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், ரோஹித் சர்மா ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி, தொடர்ந்து 6 முறை 50+ ரன்கள் அடித்த முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திருப்பார். ஆனால், அந்த வாய்ப்பு நூலிழையில் கைநழுவிப்போனது.
ராஜ்கோட் மைதானம் பேட்டிங்கிற்குச் சாதகமாக இருந்தும், கோலி இப்படி ஒரு ஷாட்டில் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.