IND vs NZ: "மைதானத்தை விட்டு போய்யா.." சதம் அடித்த மிட்செலை தள்ளிவிட்ட விராட் கோலி.. என்ன நடந்தது?
இந்தூர்: இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வீரர் டாரில் மிட்செல் அதிரடி அட்டம் ஆடி இந்திய பந்துவீச்சாளர்களை சோதித்தார். அவர் ஆட்டமிழந்து வெளியேறியபோது, விராட் கோலி அவரை தள்ளிவிட்டு வழியனுப்பிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு டாரில் மிட்செல் சிம்ம சொப்பனமாக விளங்கினார். ஆரம்பத்தில் விக்கெட் கீப்பரால் ரன்-அவுட் கண்டத்தில் இருந்து தப்பிய மிட்செல், கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.

58 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து தடுமாறியபோது, டாரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. 4வது விக்கெட்டுக்கு 219 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டனர். அதிரடியாக ஆடிய மிட்செல் 131 பந்துகளில் 15 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 137 ரன்கள் குவித்தார். இது இந்தத் தொடரில் அவர் அடிக்கும் இரண்டாவது சதம் ஆகும்.
இறுதியாக 45வது ஓவரில் முகமது சிராஜ் வீசிய பந்தில் மிட்செல், குல்தீப் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் பெவிலியன் திரும்பும்போது, இந்தூர் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு மரியாதை செலுத்தினர்.
அப்போது பவுண்டரி லைன் அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலியும், மிட்செலின் சிறப்பான ஆட்டத்தை மெச்சி கைகளைத் தட்டிப் பாராட்டினார். மிட்செல் தன்னைக் கடந்து செல்லும்போது, கோலி அவரிடம் ஏதோ ஜாலியாகப் பேசியவாறே, அவரது தோளில் செல்லமாக இடித்து, "போதும்டா சாமி.. இடத்தை காலி பண்ணு" என்பது போல அவரைத் தள்ளிவிட்டார்.
கோலியின் இந்தச் செய்கையைப் பார்த்து டாரில் மிட்செலும் சிரித்துக்கொண்டே சென்றார். களத்தில் இருவரும் போட்டி போட்டுக்கொண்டாலும், ஒரு வீரரின் திறமையை அங்கீகரிக்கும் கோலியின் இந்த செயல் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
பின்னர் 338 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில், விராட் கோலி தனி ஆளாகப் போராடினார். அவரும் பதிலுக்கு 124 ரன்கள் குவித்து சதம் அடித்தார். ஆனால் மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் இந்திய அணி 46 ஓவர்களில் 296 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி, 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.


Click it and Unblock the Notifications