IND vs NZ: காயத்தில் சிக்கிய தமிழக வீரர்.. டி20 உலகக்கோப்பையில் அவுட்? மாற்று வீரர் தயார்
மும்பை: இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்திய அணிக்குத் தொடர்ந்து சோதனைகள் வந்த வண்ணம் உள்ளன. அணியின் முக்கிய ஆல்-ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் காயத்திலிருந்து முழுமையாகக் குணமடைய இன்னும் காலதாமதம் ஆகும் என்பதால், அவர் உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது.
வாஷிங்டன் சுந்தருக்கு என்ன ஆச்சு?
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பந்துவீசும்போது வாஷிங்டன் சுந்தருக்கு இடதுபுற விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. வலி காரணமாகப் பாதியிலேயே வெளியேறிய அவர், பின்னர் அணியின் இக்கட்டான சூழலில் களமிறங்கி கே.எல்.ராகுலுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியைத் தேடித்தந்தார்.
இருப்பினும், அந்தக் காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் போட்டிகள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் டி20 தொடர் ஆகியவற்றிலிருந்து அவர் விலகினார்.

இரண்டு வாரங்கள் ஓய்வு தேவை
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, வாஷிங்டன் சுந்தர் முழுமையாகக் குணமடைய இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி 7ஆம் தேதி இந்திய அணி தனது முதல் உலகக்கோப்பை ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. அதற்குள் வாஷிங்டன் சுந்தர் உடற்தகுதி பெறுவது கடினம் என்றே தெரிகிறது.
"மருத்துவக் குழு அவருக்கு மேலும் இரண்டு வாரங்கள் ஓய்வு தேவை என்று அறிவுறுத்தியுள்ளது. எனவே அவரை டி20 உலகக்கோப்பைக்கான அணியில் தக்கவைப்பதா அல்லது அவருக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவிப்பதா என்பது குறித்துத் தேர்வுக்குழு விரைவில் முடிவெடுக்கும்" என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரவி பிஷ்னோய் தயார்
ஒருவேளை வாஷிங்டன் சுந்தர் விலகும் பட்சத்தில், அவருக்குப் பதிலாகச் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அவர் ஏற்கனவே மாற்று வீரராகத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளார். வாஷிங்டன் சுந்தர் ஏற்கனவே 2021 மற்றும் 2022 உலகக்கோப்பைத் தொடர்களைக் காயம் காரணமாகத் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பந்துவீசும் வாய்ப்பை பெற்ற ரவி பிஷ்னோய் சிறப்பாக பந்து வீசி அசத்தினார். 4 ஓவர்களில் வெறும் 18 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். எனவே, காயத்தில் இருக்கும் வாஷிங்டன் சுந்தரை அவசரகதியில் உலகக்கோப்பைக்கு தயார் செய்ய வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
திலக் வர்மா நிலை என்ன?
இதற்கிடையில், மற்றொரு இளம் வீரரான திலக் வர்மா காயத்திலிருந்து வேகமாகத் தேறி வருகிறார். வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.
ஜனவரி 31ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அவர் களமிறங்க வாய்ப்புள்ளது. இருப்பினும், உலகக்கோப்பைத் தொடர் முக்கியம் என்பதால், அவரை அவசரப்படிக் களமிறக்காமல் முழு ஓய்வு அளிக்கவே அணி நிர்வாகம் விரும்புவதாகத் தெரிகிறது. அவர் முழு உடற்தகுதியுடன் உலகக்கோப்பையில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications