மும்பை: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி விளையாடுகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி வரும் 11ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தர்ப போட்டிக்கு தயாராகும் விதமாக சுமார் மூன்று மணி நேரம் பயிற்சி மேற்கொண்டது.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நியூசிலாந்து அணி வில் யங், டி20 உலகக் கோப்பை வெகு அருகில் உள்ள நிலையில், இத்தொடர் முக்கியத்துவத்தை இழப்பது எளிது. ஆனால், உங்கள் நாட்டிற்காக விளையாடும் போது, ஆர்வம், உத்வேகம் இரண்டும் எப்போதும் இருக்க வேண்டும். இது டெஸ்ட், டி20 கிரிக்கெட்டில் இருந்து வேறுபட்ட வடிவம்.

இப்போதெல்லாம் ஒருநாள் கிரிக்கெட்டில் சற்று குறைவாகவே விளையாடுகிறோம். இருப்பினும், சாம்பியன்ஸ் டிராபி, உலகக் கோப்பை என அற்புதமான வரலாற்றைக் கொண்ட இரண்டு ஐசிசி உலக நிகழ்வுகள் இன்னும் உள்ளன," என்று தெரிவித்தார்.
தனது கடந்த காலச் செயல்பாடு குறித்துப் பேசிய யங், 2024-25 டெஸ்ட் தொடரில் இந்தியாவை 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து தோற்கடித்தபோது அவரே தொடர் நாயகன் பட்டத்தைப் பெற்றார். அதுவே டெஸ்ட் வடிவத்தில் தனது மிகச்சிறந்த செயல்பாடு என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் ஏற்பட்ட தோல்விக்குப் பழிவாங்கும் எண்ணம் தங்கள் மனதில் இல்லை என்று யங் தெளிவுபடுத்தினார். "அது முற்றிலும் வேறுபட்ட சவால், அப்போது அணிகள் வேறுபட்டவை, அதனால் அது கடந்த காலம்," என்று அவர் குறிப்பிட்டார். "அதைப்பற்றி நாங்கள் எண்ணவில்லை. ஒருநாள் தொடருக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்," என்றும் அவர் மேலும் கூறினார்.
நியூசிலாந்து அணியில் நம்பிக்கைக்குரிய இளம் திறமைகள் உள்ளன. தங்கள் பங்களிப்பை வழங்குவதன் முக்கியத்துவத்தை யங் வலியுறுத்தினார். ஃபிரான்சைஸ் லீக்குகள் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் அணிகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்கிறார் யங். "இளம் வீரர்கள் இந்த குழுவிற்குள் வந்து உடனடியாக சிறப்பாக செயல்படுவதைக் காண்பது அருமையாக உள்ளது. அவர்கள் களமிறங்கிய உடனேயே சிறந்த அவுட்புட்டை வழங்குகிறார்கள்."
"நாம் பேசும் ஒரு விஷயம், எடுப்பதை விட அதிகம் கொடுக்க வேண்டும். இது மூத்த வீரர்கள் மட்டுமல்ல, குழுவில் உள்ள அனைவரிடமிருந்தும் எதிர்பார்க்கப்படுகிறது," என யங் தெரிவித்தார். இளம் வீரர்களுக்கு இந்தியச் சூழலிலும் முழு ஆதரவை அளிப்போம். சுதந்திரமாகச் செயல்பட இது உதவும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
"கோலியும் ஷர்மாவும் நம்பமுடியாத வீரர்கள். நீண்ட காலமாகவே உலக கிரிக்கெட்டில் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள். பிளாக் கேப்ஸ் குழுவில் உள்ள பல வீரர்களைப் போலவே, தானும் அவர்களைப் பார்த்து வியந்துள்ளதாக அவர் புகழ்ந்தார்."
வேலூரைச் சேர்ந்த அறிமுக லெக் ஸ்பின்னர் ஆதித்யா அசோக் தனது முதல் இந்திய சுற்றுப்பயணத்தில் சிறப்பாக செயல்படுவார் என்று யங் நம்பிக்கை தெரிவித்தார். "ஆதி உள்நாட்டு கிரிக்கெட்டில் கணிசமாக விளையாடியுள்ளார். அவர் ஒரு நம்பமுடியாத திறமையான லெக் ஸ்பின் பந்துவீச்சாளர்," என்று யங் பாராட்டினார்.
"அவரிடம் அனைத்துப் பந்துவீச்சு நுணுக்கங்களும் உள்ளன. அவர் நல்ல வேகத்தில் பந்துவீசுகிறார், மேலும் அவர் ஆடுகளத்தில் இருந்து பவுன்ஸையும் பெற முடியும். ஆதி ஒருநாள் கிரிக்கெட்டில் எவ்வாறு செயல்படப்போகிறார் என்பதைப் பார்ப்பது மிகவும் உற்சாகமாக இருக்கும்," என்று யங் ஆர்வத்துடன் குறிப்பிட்டார்.