உலக கோப்பை அரையிறுதி - இந்தியாவுக்கு ஆபத்தை தரக் கூடிய 5 நியூசிலாந்து வீரர்கள்
மும்பை : இந்தியாவும் நியூசிலாந்து அணியும் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் புதன்கிழமை மோத உள்ளது. இந்த போட்டி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற இரு அணிகளுக்கும் சம பல வாய்ப்பு இருப்பதால் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இது அமையும். இந்த நிலையில் இந்தியாவுக்கு ஆபத்தை தரக்கூடிய ஐந்து நியூசிலாந்து வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா தான். 24 வயதான அவர் 9 போட்டிகளில் விளையாடி 565 ரன்கள் குவித்திருக்கிறார். இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள ரச்சின் ரவீந்திரா இதுவரை மூன்று சதம், இரண்டு அரை சதம் அடித்திருக்கிறார். இதேபோன்று நியூசிலாந்து பேட்ஸ்மேன் டேரல் மிட்செல் நடப்பு உலகக்கோப்பை தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 418 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதில் ஒரு சதம், இரண்டு அரை சதம் அடங்கும். சராசரியாக 60 என்ற அளவில் வைத்திருக்கும் டேரல் மிட்செல் 110 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார். இந்த தொடரில் அவர் 15 சிக்சர்களும், 39 பவுண்டரிகளும் அடித்திருக்கிறார். டாரல் மிச்சலை எவ்வளவு விரைவில் இந்தியா ஆட்டம் இழக்க வைக்கிறதோ அவ்வளவு நல்லதாகும். இதேபோன்று நியூசிலாந்து சுழற் பந்துவீச்சாளர் மிச்சல் இந்தியாவுக்கு ஆபத்து தரக்கூடிய வீரராக திகழ்கிறார்.
9 போட்டிகளில் விளையாடிய மிச்சல் சான்ட்நர் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். மிச்சல் சார்ட்னரின் பந்துவீச்சில் விராட் கோலி மூன்று முறை ஆட்டம் இழந்து இருக்கிறார். இதனால் இவரது பத்து ஓவரை இந்தியா கவனத்துடன் எதிர் கொள்ள வேண்டும். இந்திய அணிக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக டிரெண்ட் போல்ட் இருக்கிறார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருக்கிறார்.
தன்னுடைய இடது கை வேகப்பந்து வீச்சால் இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கக்கூடிய வீரராக திகழ்கிறார். இதனால் ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சை இந்திய வீரர்கள் கவனத்துடன் விளையாட வேண்டும். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் வேகப்பந்துவீச்சாளர் லோகி பிகுர்சன். நடப்பு உலக கோப்பை தொடரில் அவர் ஆறு போட்டியில் மட்டுமே விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
தன்னுடைய அதிவேக ஷார்ட் பாலால் இந்திய பேட்ஸ்மன்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் நபராக திகழ்கிறார். இதைத் தவிர கிளேன் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டிவோன் கான்வே, நட்சத்திர வீரர் வில்லியம்சன் என பல திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். இவர்களை சமாளிப்பது என்பது இந்தியாவுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.


Click it and Unblock the Notifications