பெங்களூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் பிடித்த கேட்ச் திருப்புமுனையாக அமைந்தது. எனினும், அவரது கையில் காயம் ஏற்பட்டது. அவர் வலியில் துடித்தார். ஏற்கனவே, ரிஷப் பண்ட் முழங்காலில் காயம் ஏற்பட்டு ஆடுகளத்தை விட்டு வெளியேறி இருந்தார். அவர் மூன்றாம் நாளிலும் விக்கெட் கீப்பிங் செய்ய வரவில்லை. இந்த நிலையில் ஜெய்ஸ்வாலுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் முதல் நாள் ஆட்டம் மழையால் முற்றிலுமாக கைவிடப்பட்டது. இரண்டாம் நாள் அன்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்து இருந்தது. அடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங் ஆடியது. நியூசிலாந்து அணியை இந்தியா விரைவாக வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு நேர்மாறான விஷயங்கள் நடந்தன.

நியூசிலாந்து அணி ரன் குவிப்பில் ஈடுபட்டது. மேலும் இரண்டாம் நாள் அன்று இந்தியா அணி வீரர்கள் நிறைய கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டனர். இந்த நிலையில் மூன்றாம் நாள் அன்று இந்தியா சிறப்பாக செயல்படுமா? என்ற கேள்வி இருந்தது. மூன்றாம் நாள் அன்று முகமது சிராஜ் வீசிய பந்தில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் "லேட் கட்" செய்ய நினைத்தார்.
ஆனால், பந்து ஸ்லிப்பில் நின்று இருந்த ஜெய்ஸ்வால் வசம் சென்றது. வேகமாக வந்த பந்தை ஸ்லிப் ஃபீல்டர் ஜெய்ஸ்வால் கேட்ச் பிடித்தார். ஆனால், அவர் விரலில் பந்து பலமாக தாக்கியதால் அவருக்கு வலி ஏற்பட்டது. அந்த கேட்ச் இந்திய அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின் இந்தியா வரிசையாக விக்கெட்களை வீழ்த்தியது.
மறுபுறம் ஜெய்ஸ்வால் ஆடுகளத்தை விட்டு வெளியேறி முதல் உதவி சிகிச்சை செய்த பின்னர் மீண்டும் ஆடுகளத்துக்கு வந்தார். ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்வாரா? என்ற சந்தேகம் இருந்த நிலையில் அவர் இரண்டாவது இன்னிங்க்ஸில் பேட்டிங் செய்து 52 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 402 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, சர்ஃபராஸ் கான் ஆகியோர் அரை சதம் அடித்தனர். இந்தியா மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்து உள்ளது.