புனே: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடி ஆட்டம் ஆடிய ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் ஜாம்பவான் வீரர்கள் செய்த பிரம்மாண்ட டெஸ்ட் சாதனை ஒன்றை உடைத்து இருக்கிறார். முன்னதாக இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.
இரண்டாவது இன்னிங்ஸில் அவர் 65 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்தார். மூன்று சிக்ஸ் அடித்து இருந்தார். அதன் மூலம் ஒரே ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் 30க்கும் மேற்பட்ட சிக்ஸ் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் செய்திருந்தார். மேலும், 77 ரன்கள் சேர்த்ததன் மூலம் இந்த ஆண்டு மட்டும் அவர் இந்திய மண்ணில் ஆடிய டெஸ்ட் போட்டிகளில் 1051 ரன்கள் எடுத்து இருந்தார்.

இதன் மூலம் இந்திய மண்ணில் ஒரே ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். 1979 ஆம் ஆண்டு குண்டப்பா விசுவநாத் ஒரே ஆண்டில் இந்திய மண்ணில் 1047 டெஸ்ட் ரன்களை எடுத்து இருந்தார். அந்த சாதனையை நீண்ட காலமாக எந்த பேட்ஸ்மேனாலும் முறியடிக்க முடியாமல் இருந்தது. சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களால் கூட அதை முறியடிக்க முடியவில்லை.
அந்த அசாதாரணமான சாதனையை 45 ஆண்டுகளுக்குப் பின் ஜெய்ஸ்வால் முறியடித்து இருக்கிறார். அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடர், வங்கதேச டெஸ்ட் தொடர் மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் தொடர்களில் விளையாடி 1051 ரன்களை எடுத்து இருக்கிறார். மேலும், உலக அளவில் தங்கள் சொந்த மண்ணில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்து இருக்கிறார்.
ஒரே ஆண்டில் இந்திய மண்ணில் 1000-க்கும் அதிகமான ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல் :
1051 ரன்கள் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் (2024)
1047 ரன்கள் - குண்டப்பா விஸ்வநாத் (1979)
1013 ரன்கள் - சுனில் கவாஸ்கர் (1979)
ஒரே ஆண்டில் சொந்த மண்ணில் 1000-க்கும் அதிகமான ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல் :
1407 ரன்கள் - மைக்கேல் கிளார்க் (ஆஸ்திரேலியா) (2012)
1126 ரன்கள் - முகமது யூசுப் (பாகிஸ்தான்) (2006)
1058 ரன்கள் - கிரஹாம் கூச் (இங்கிலாந்து) (1990)
1051 ரன்கள் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா) (2024)