கவுஹாத்தி: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியில் இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா 340 ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடி ஆட்டம் ஆடினார். வெறும் 14 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டிய அவர், யுவராஜ் சிங்கின் நீண்ட கால சாதனையை நூலிழையில் தவறவிட்டார். இந்நிலையில், இது தொடர்பாக யுவராஜ் சிங் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் பரவி வருகிறது.
சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிவேக அரைசதம் அடித்தவர் என்ற சாதனை யுவராஜ் சிங் வசமே உள்ளது. 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக யுவராஜ் சிங் வெறும் 12 பந்துகளில் அரைசதம் விளாசியிருந்தார். அந்தப் போட்டியில் தான் அவர் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் அபிஷேக் சர்மா 14 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன் மூலம் இந்திய அளவில் அதிவேக அரைசதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடிக்க அவருக்கு 2 பந்துகள் கூடுதலாகத் தேவைப்பட்டது.
தனது சாதனையை அபிஷேக் சர்மா நெருங்கியதைத் தொடர்ந்து, யுவராஜ் சிங் தனது எக்ஸ் தளத்தில் (ட்விட்டர்) ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அபிஷேக் சர்மாவை அவர் செல்லமாகக் கலாய்த்துள்ளார்.
யுவராஜ் சிங் தனது பதிவில், "இன்னும் உன்னால் 12 பந்துகளில் 50 ரன்கள் அடிக்க முடியவில்லையா? இருக்கட்டும்.. மிகச் சிறப்பாக விளையாடினாய்.. இப்படியே கலக்கு" என்று குறிப்பிட்டுள்ளார். ஒரே நேரத்தில் அபிஷேக் சர்மாவை வம்பிழுத்துக்கொண்டே, அவரது ஆட்டத்தையும் பாராட்டியுள்ள யுவராஜ் சிங்கின் இந்தச் செயல் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் சர்மா, யுவராஜ் சிங்கை தனது குருவாகக் கருதுபவர். யுவராஜ் சிங்கின் பயிற்சியின் கீழ் வளர்ந்தவர் என்பதால், உரிமையுடன் யுவராஜ் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
யுவராஜ் சிங் - 12 பந்துகள் (எதிரணி - இங்கிலாந்து, 2007)
அபிஷேக் சர்மா - 14 பந்துகள் (எதிரணி - நியூசிலாந்து, 2026)
ஹர்திக் பாண்டியா - 16 பந்துகள் (எதிரணி - தென்னாப்பிரிக்கா, 2025)
இப்போட்டியில் மொத்தம் 20 பந்துகளைச் சந்தித்த அபிஷேக் சர்மா, 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது அதிரடியால் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.