Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"போய் பந்தை போடு!" பாகிஸ்தான் பவுலருடன் முறைத்த 14 வயது வைபவ்.. ஸ்டம்ப் மைக்கில் பதிவான வாக்குவாதம்

தோஹா: தோஹாவில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடரின் லீக் போட்டியில், இந்தியாவின் 14 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுடன் களத்தில் நேருக்கு நேர் மோதிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருள் ஆகி இருக்கிறது.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உபெய்த் ஷா தன்னைச் சீண்டியபோது, "போ போய் பந்தை போடு" என்று வைபவ் சூர்யவன்ஷி கொடுத்த பதிலடி, ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

IND vs PAK 14-Year-Old Vaibhav Suryavanshi Confronts Pak Pacer Stump Mic Catches Fiery Exchange

இந்திய கிரிக்கெட்டின் அடுத்த பெரிய 'பவர்-ஹிட்டர்' எனப் புகழப்படும் 14 வயது வைபவ் சூர்யவன்ஷி, இந்தப் போட்டியிலும் தனது அதிரடியால் பாகிஸ்தான் பந்துவீச்சைச் சிதறடித்தார். வெறும் 28 பந்துகளைச் சந்தித்த அவர், 5 பவுண்டரிகள் மற்றும் 3 விண்ணை முட்டும் சிக்ஸர்களுடன் 45 ரன்கள் குவித்து, இந்திய அணிக்கு ஒரு வலுவான தொடக்கத்தை அளித்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக, இந்திய வீரர் ஒருவர் அடித்த இரண்டாவது அதிவேக டி20 சதத்தை (144 ரன்கள்) விளாசிய கையோடு களமிறங்கிய வைபவ், இந்தப் போட்டியிலும் தனது அசுரத்தனமான ஃபார்மைத் தொடர்ந்தார். அவரது ஆட்டத்தைப் பார்த்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

ஸ்டம்ப்-மைக் வாக்குவாதம்

இந்தப் போட்டியின் தொடக்கத்தில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உபெய்த் ஷா வீசிய பந்தை வைபவ் அடிக்கத் தவறினார். அப்போது, உபெய்த் ஷா ஏதோ கூறி வைபவைச் சீண்டினார். அதற்குச் சற்றும் அசராத வைபவ் சூர்யவன்ஷி ஸ்டம்ப் மைக்கில் தெளிவாகக் கேட்கும் வகையில், "போ போய் பந்த போடு" என்று பதிலடி கொடுத்தார்.

அதை சொன்னதோடு நிறுத்தவில்லை. அடுத்த பந்தையே கவர் திசைக்கு மேல் ஒரு புயல் வேக பவுண்டரிக்கு விரட்டி, பந்து பவுண்டரி லைனைத் தொடும் வரை பேட்டை உயர்த்திப் பிடித்து ஸ்டைலாக போஸ் கொடுத்தார். இது, பாகிஸ்தான் பவுலரை மேலும் கடுப்பேற்றியது. இந்தச் சம்பவம், இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மோதல்களின் நீண்ட சரித்திரத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைச் சேர்த்துள்ளது.

விரக்தியில் வெடித்த வைபவ்

அரைசதத்தை நோக்கி அதிரடியாக முன்னேறிக் கொண்டிருந்த வைபவ், 10-வது ஓவரின் ஐந்தாவது பந்தில், சுஃபியான் முக்கீம் பந்துவீச்சில் லாங்-ஆன் திசையில் தூக்கி அடிக்க முயன்று, கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பவுண்டரி குஷன் நகர்ந்ததா என்று மூன்றாவது நடுவர் நீண்ட நேரம் ஆய்வு செய்த பிறகு, அவுட் என்று தீர்ப்பளித்தார்.

அரைசதத்தை வெறும் 5 ரன்களில் தவறவிட்ட விரக்தியில், தனது பேட்டால் தரையில் ஓங்கி அடித்துவிட்டு, கடும் கோபத்துடன் பெவிலியனை நோக்கி நடந்தார் வைபவ்.

இந்திய அணி சொதப்பல்

வைபவ்வின் விக்கெட்டுக்குப் பிறகு, இந்திய அணியின் மிடில்-ஆர்டர் மளமளவெனச் சரிந்தது. ஒரு வலுவான நிலையில் இருந்த இந்திய அணி, அடுத்த 8 ஓவர்களில் 41 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இறுதியில், 19 ஓவர்களில் 136 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தப் போட்டியின் முடிவு எதுவாக இருந்தாலும், வைபவ் சூர்யவன்ஷியின் அஞ்சா நெஞ்சம் கொண்ட அதிரடி ஆட்டத்திற்காகவும், பாகிஸ்தான் பவுலருடன் அவர் நேருக்கு நேர் மோதிய அந்தத் தருணத்திற்காகவும் இந்த ஆட்டம் நிச்சயம் நினைவுகூரப்படும்.

Story first published: Monday, November 17, 2025, 16:59 [IST]
Other articles published on Nov 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+