IND vs PAK: இந்த பாகிஸ்தான் வீரர் உண்மையிலே ஆபத்தானவர் தான்.. ஆனால், அபிஷேக் சமாளிப்பார்-ஹர்பஜன்
கொழும்பு: டி20 உலககோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா மீண்டும் உடற்தகுதியுடன் திரும்பியதை மகிழ்ச்சியுடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், வரவேற்றுள்ளார். பாகிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர் உஸ்மான் தாரிக்கை டி20 உலகக் கோப்பைப் போட்டியில் எதிர்கொள்ள, அபிஷேக்கின் திறன் இந்திய அணிக்கு பேருதவியாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தாரிக்கின் தனித்துவமான பந்துவீச்சு முறை, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பந்தை வீசுவதற்கு முன் ஒரு சின்ன Pause விட்டு, செயல்படும் முறை மற்றும் பக்கவாட்டில் இருந்து பந்தை எறிவது போன்ற பந்துவீச்சு ஸ்டைல் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பேசிய ஹர்பஜன் சிங், "ILT20 லீக்கில் தாரிக்கை நான் பந்துவீசப் பார்த்திருக்கிறேன். அங்கு அவர் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மற்ற சுழற்பந்துவீச்சாளர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர், பல மாறுபாடுகளைக் கொண்டவர்," என்றார்.
"அவரது 'நின்று வீசும் stand-and-deliver பந்துவீச்சு முறை குறித்து நிறைய பேர் பேசுகிறார்கள். அது எளிதல்ல. யாராலும் நின்று பந்துவீச முடியும், ஆனால் அவரிடம் உள்ளதுபோல் பல மாறுபாடுகள் வேண்டும். பெரிய மைதானங்களிலும், மெதுவான ஆடுகளங்களிலும் அவரை அடித்து ஆடுவது கடினம்," என்று ஹர்பஜன் விளக்கினார்.
"நீங்கள் இதற்கு முன்பு எதிர்கொள்ளாத ஒரு வீரரை விளையாடும்போது சற்று கவனமாக இருப்பது அவசியம். இந்திய அணி அவரை சமாளித்து பெரிய விக்கெட்டுகளை விடக்கூடாது. அபிஷேக் திரும்பி வருவது மகிழ்ச்சி, ஏனெனில் அவர் சுழற்பந்தை மிகச் சிறப்பாக விளையாடி, தனது ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துவார்," என்றார்.
'அபிஷேக் ஒரு தரமான வீரர். அவர் தனியாளாகப் போட்டியை வெல்லும் உறுதி கொண்டவர். நிறைய கிரிக்கெட் விளையாடிய அனுபவத்தில், அவர் அனைத்து ஷாட்களையும் கொண்ட ஒரு சரியான பேட்ஸ்மேன் என்று எனக்குத் தெரியும்," என்று குறிப்பிட்டார்.
மேலும், "பல பேட்ஸ்மேன்களிடம் அனைத்து ஷாட்களும் இருக்காது. அபிஷேக் அப்படிப்பட்டவர் அல்ல. அவர் முதல் பந்திலிருந்தே அடித்து ஆடுபவர். களத்தில் இருக்கும் வரை அடித்துக்கொண்டே இருப்பார். எனவே, அவர் ஒரு சரியான பேட்ஸ்மேன்," என்று ஹர்பஜன் பாராட்டினார்.


Click it and Unblock the Notifications