Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: 2 கிலோ குறைந்து வீக் ஆகி விட்டார்.. பாகிஸ்தான் போட்டியில் ஆட முடியாத நிலையில் அபிஷேக்!

டெல்லி: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது. நமீபியாவுக்கு எதிரான போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், இந்த வெற்றிக்கு நடுவே இந்திய அணிக்கு ஒரு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் உடல்நிலை இன்னும் முழுமையாக சீரடையவில்லை என கூறப்படுகிறது.

நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் களமிறங்கினார். வயிற்றுத் தொற்று மற்றும் கடுமையான காய்ச்சல் காரணமாக அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை.

IND vs PAK Abhishek Sharma s Health update Will the Star Opener Face Pakistan After Drastic Weight Loss

உடல் எடை குறைவால் பின்னடைவு

மருத்துவமனை வட்டாரத் தகவல்களின்படி, இந்த நோய்த்தொற்று காரணமாக அபிஷேக் சர்மாவின் உடல் எடை கணிசமாகக் குறைந்துள்ளது. அவர் சுமார் 2 கிலோ வரை எடை குறைந்துள்ளதாகவும், இதனால் அவர் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக இதுபோன்ற பாதிப்புகளிலிருந்து மீண்டு வந்து, சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் அளவிற்கு உடற்தகுதியைப் பெறச் சில நாட்கள் ஆகும். அர்ஷ்தீப் சிங் பகிர்ந்த வீடியோவில், தான் தற்போது வெறும் "பருப்பு சாதம்" மட்டுமே சாப்பிட்டு வருவதாக அபிஷேக் தெரிவித்துள்ளார்.

பயிற்சிதான் தீர்மானிக்கும்

வரும் பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மோதுகிறது. இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா என்பது கொழும்பில் நடைபெறும் பயிற்சிக்குப் பிறகே தெரியவரும். வழக்கமாக அபிஷேக் சர்மா வலைப்பயிற்சியில் நீண்ட நேரம் பேட்டிங் செய்வார். சுமார் 75 முதல் 90 நிமிடங்கள் வரை அவர் பயிற்சி எடுப்பது வழக்கம். பாகிஸ்தான் போட்டிக்கு முந்தைய பயிற்சியில் அவரால் அதேபோல நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடிந்தால் மட்டுமே, ஆடும் லெவனில் சேர்க்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

கேப்டன் கொடுத்த அப்டேட்

நமீபியா போட்டிக்கு முன் டாஸ் போடும்போது பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், "அபிஷேக் சர்மா இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை. அவர் பழைய நிலைக்குத் திரும்ப இன்னும் ஒன்று அல்லது இரண்டு போட்டிகள் ஆகலாம்" என்று கூறியிருந்தார். கேப்டனின் இந்தப் பேட்டி, பாகிஸ்தான் போட்டியிலும் அபிஷேக் விளையாடுவது சந்தேகம் என்பதை உறுதி செய்துள்ளது.

அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே அபிஷேக் சர்மா 100 சதவீத உடற்தகுதியுடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டியில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்த அவர், பின்னர் பீல்டிங் செய்யக் கூட வரவில்லை. அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன்தான் மாற்று வீரராகக் களமிறங்கினார்.

நமீபியாவை எளிதாக வீழ்த்திவிட்டாலும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. அணியின் முக்கிய வீரரான அபிஷேக் சர்மா விரைவில் குணமடைந்து அணிக்குத் திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Story first published: Friday, February 13, 2026, 11:11 [IST]
Other articles published on Feb 13, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+