துபாய்: 2025 ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்த இளம் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மாவின் பேட்டிங்கை, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் பாராட்டியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் போன்ற அழுத்தம் நிறைந்த போட்டியில், அபிஷேக் ஆடிய விதம், வலைப் பயிற்சியில் விளையாடுவதைப் போல இருந்ததாக அவர் வியந்து கூறியுள்ளார்.
துபாயில் நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில், 172 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு, அபிஷேக் ஷர்மா வெறும் 39 பந்துகளில் 74 ரன்கள் குவித்து அபாரமான தொடக்கத்தை அளித்தார். ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப் போன்ற முன்னணி பந்துவீச்சாளர்களைக் கொண்ட பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை அவர் துவம்சம் செய்த விதம், முன்னாள் வீரர்கள் பலரையும் கவர்ந்தது.

இந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய மிஸ்பா-உல்-ஹக், "அபிஷேக்கிடம் இருக்கும் திறமையும், மனோபாவமும் அற்புதம். முதல் முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறார், ஆனால் அவர் எந்தவித அழுத்தத்திலும் இருப்பது போலவே தெரியவில்லை. வலைப் பயிற்சியில் விளையாடுவதைப் போல இருந்தது. பந்து அவரது 'சோன்'-ல் (Zone) விழுந்தால், மிகவும் நிதானமாக அதை பவுண்டரிக்கு அனுப்பிவிடுகிறார்" என்று பாராட்டினார்.
மேலும், அபிஷேக்கின் ஆட்ட யுக்தி குறித்தும் மிஸ்பா விரிவாகப் பேசினார். "மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர் எப்போதும் எதிரணியின் முக்கிய பந்துவீச்சாளரை குறிவைத்துத் தாக்கி, அவர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறார். இது எதிரணியின் திட்டங்களை முற்றிலும் சீர்குலைத்துவிடும்" என்று குறிப்பிட்டார்.
"நல்ல பந்துகளுக்கு அபிஷேக் மரியாதை கொடுக்கிறார், ஆனால் கொஞ்சம் மெதுவான பந்து கிடைத்தாலும், அதைத் தண்டிக்கத் தவறுவதில்லை. வேகப்பந்து வீச்சாளர்களின் முக்கிய ஆயுதம் 'ஹார்ட் லென்த்' பந்துகள்தான். ஷஹீன் அப்ரிடி அந்த லென்த்தில் பந்துவீச முயற்சித்தபோது, அபிஷேக் அந்தப் பந்துகளுக்கு மரியாதை கொடுத்தார். ஆனால், பந்து ஷார்ட்டாகவோ அல்லது ஃபுல்லாகவோ சென்றபோது, தனக்கு இடம் உருவாக்கிக்கொண்டு விளாசித் தள்ளிவிட்டார்" என்று மிஸ்பா-உல்-ஹக், அபிஷேக்கின் ஆட்ட நுணுக்கத்தை விளக்கினார்.
இந்தியாவுக்கு எதிரான தொடர் தோல்விகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரமே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், எதிரணி வீரராக இருந்தாலும், அபிஷேக் ஷர்மாவின் திறமையை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பாராட்டியிருப்பது, விளையாட்டு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.