Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“கைகுலுக்கணுமா.. கட்டி பிடிக்கணுமா..” பாகிஸ்தானின் நாடகத்தைக் கண்டு கடுப்பான கபில் தேவ் விளாசல்

அபுதாபி: 2025 ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ஏற்பட்ட 'கைக்குலுக்கல்' சர்ச்சை பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், பாகிஸ்தான் அணியையும், அதன் கிரிக்கெட் வாரியத்தையும் கடுமையாகச் சாடியுள்ளார்.

தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவதை விட்டுவிட்டு, கிரிக்கெட்டில் கவனம் செலுத்துமாறு அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைக்குலுக்க மறுத்த சம்பவம், கடந்த சில நாட்களாக கிரிக்கெட் உலகில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்தச் சிறிய நிகழ்வை பாகிஸ்தான் தரப்பு ஊதிப் பெரிதாக்கியிருப்பது, பல முன்னாள் வீரர்களை எரிச்சலடையச் செய்துள்ளது.

IND vs PAK Asia Cup Kapil Dev Slams Pakistan Team Over Handshake Controversy

இந்தப் பிரச்சினை, போட்டி முடிந்தவுடனேயே தொடங்கியது. இந்திய வீரர்களின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா, போட்டிக்குப் பிந்தைய நேர்காணலைப் புறக்கணித்தார். அதோடு நிற்காமல், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி), இந்த விவகாரத்தில் போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட்டை இழுத்துவிட்டது. டாஸின் போது இரு அணி கேப்டன்களும் கைக்குலுக்க வேண்டாம் என்று அவர்தான் கூறியதாக பிசிபி குற்றம் சாட்டியது.

மேலும், இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி) இரண்டு காட்டமான மின்னஞ்சல்களை அனுப்பியதுடன், ஜிம்பாப்வேயைச் சேர்ந்த நடுவர் பைகிராஃப்டை நீக்க வேண்டும் என்றும், இல்லையெனில் தொடரிலிருந்து விலகுவோம் என்றும் மிரட்டல் விடுத்தது. ஆனால், பிசிபியின் இந்த இரண்டு கோரிக்கைகளையும் ஐசிசி நிராகரித்துவிட்டது.

இந்த விவகாரம் அடுத்தகட்டமாக, புதன்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான பாகிஸ்தானின் போட்டிக்கு முன்பு தீவிரமடைந்தது. இஸ்லாமாபாத்திலிருந்து அனுமதி வரும் வரை, பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் ஹோட்டல் அறைகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதால், போட்டி தொடங்குவதில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதம் ஏற்பட்டது. பின்னர், நடுவர் பைகிராஃப்ட் தங்கள் அணியிடம் மன்னிப்பு கேட்டதாக பிசிபி ஒரு கதையைக் கட்டவிழ்த்துவிட்டது.

இந்தத் தொடர் நாடகங்களால் தீவிர அதிருப்தியடைந்த கபில் தேவ், பாகிஸ்தானின் போக்கைக் கடுமையாக விமர்சித்துள்ளார். கைக்குலுக்குவது என்பது கிரிக்கெட்டில் ஒரு சம்பிரதாயமான வழக்கம் மட்டுமே என்றும், அது விதிகளின் ஒரு பகுதியல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, கைக்குலுக்க வேண்டுமா, வேண்டாமா என்பது இந்திய அணியின் முற்றிலும் தனிப்பட்ட விருப்பம் என்று அவர் கூறினார். இந்தச் சிறிய விஷயத்தைப் பெரிதாக்கி, நடுவரையும் இதில் இழுத்து, பாகிஸ்தான் உருவாக்கும் இந்த நாடகத்தைக் கண்டு தான் ஆத்திரமடைந்ததாகவும் கபில் தேவ் குறிப்பிட்டார்.

"இவை எல்லாம் சிறிய விஷயங்கள். கிரிக்கெட் விளையாடுவதில்தான் கவனம் செலுத்த வேண்டும். யாராவது கைகுலுக்க விரும்பவில்லை என்றால், அதை இரு தரப்பும் ஒரு பெரிய பிரச்சினையாக மாற்றத் தேவையில்லை. தவறான அறிக்கைகளைக் கொடுப்பது சரியல்ல, ஆனால் சில கிரிக்கெட் வீரர்கள் சர்ச்சையாக மாறும் அறிக்கைகளைக் கொடுக்கிறார்கள். பாகிஸ்தான் நன்றாக கிரிக்கெட் விளையாடவில்லை; அவர்கள் அதில் கவனம் செலுத்த வேண்டும். கைகுலுக்க வேண்டுமா அல்லது கட்டிப்பிடிக்க வேண்டுமா என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம்" என்று அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

அதே நேரத்தில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஆசியக் கோப்பையை வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொள்ளும் என்றும் கபில் தேவ் நம்பிக்கை தெரிவித்தார். ஏற்கனவே சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணி, கடந்த 20 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக விளையாடி வருவதாகவும், ஐசிசி போட்டிகளில் அணியின் செயல்பாடு அபாரமாக இருப்பதாகவும் அவர் பாராட்டினார்.

"நமது கிரிக்கெட் ஒழுங்குடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்திய அணி 2025 ஆசியக் கோப்பையை வெல்லும் என்று நம்புகிறேன்" என்றும் கபில் தேவ் கூறினார். இந்திய அணி, தனது முதல் இரண்டு குரூப் சுற்றுப் போட்டிகளிலும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாகிஸ்தான் அணிகளை முறையே ஒன்பது மற்றும் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, September 19, 2025, 15:23 [IST]
Other articles published on Sep 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+