துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரின் கேப்டன்கள் - பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா ஆகியோருக்கிடையேயான கைகுலுக்கல் சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்க வந்த போது, சல்மான் ஆகா அதை மறுத்ததாக இந்திய ரசிகர்களும், சல்மான் ஆகா கைகுலுக்க வந்த போது சூர்யகுமார் யாதவ் அதை மறுத்ததாக பாகிஸ்தான் ரசிகர்களும் பேசி வரும் நிலையில், இதன் உண்மையான பின்னணி என்ன? என்று பார்க்கலாம்.

2025 ஆசிய கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் கேப்டன்களும் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் என அனைத்து அணிகளின் கேப்டன்களும் கலந்துகொண்டனர்.
இயல்பாகவே, இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் அரசியல் பதற்றம் காரணமாக, இந்த நிகழ்வில் இருநாட்டு கேப்டன்களின் செயல்பாடுகள் அனைவராலும் உற்றுநோக்கப்பட்டது. பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததும், கேப்டன்கள் மேடையை விட்டு வெளியேறும்போது எடுக்கப்பட்ட ஒரு சிறு காணொளிதான் இந்தச் சர்ச்சைக்கு மூல காரணமாக அமைந்தது.
அந்த காணொளியில், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவும், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவும் கைகுலுக்கிக் கொள்ளாமல் செல்வது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டது. இது சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாக பரவியது. இரு கேப்டன்களுக்கும் இடையே ஏதோ மனக்கசப்பு என்றும், அதனால்தான் அவர்கள் கைகுலுக்கலைத் தவிர்த்ததாகவும் பலரும் கருத்து தெரிவிக்கத் தொடங்கினர்.
ஆனால், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அந்த நிகழ்வில் நேரடியாக கலந்துகொண்ட பத்திரிகையாளரான ருதுராஜ் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "அந்த பத்திரிகையாளர் சந்திப்பு மிகவும் சுமூகமாகவே நடைபெற்றது. சமூக ஊடகங்களில் பேசப்படுவதுபோல் அங்கு எந்தவிதமான விரோதப் போக்கும் இல்லை" என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், "பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த பிறகு, கேப்டன்கள் மேடையிலிருந்து வெளியேறும்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. சூர்யகுமார் யாதவ், அறையின் பின்புறம் செல்ல முயன்றபோது, சல்மான் ஆகா அவருடன் கைகுலுக்கினார். அது மிகவும் சுருக்கமான, ஒரு சில நொடிகள் மட்டுமே நீடித்த ஒரு நிகழ்வு. அது ஒரு சம்பிரதாயமான கைகுலுக்கல் மட்டுமே. அவர்கள் நின்று நிதானமாகப் பேசிக்கொள்ளவில்லை. பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகளில் கேப்டன்கள் பேசிக்கொள்வதுபோல் நீண்ட உரையாடல் எதுவும் நடக்கவில்லை." என்றார்.
ருதுராஜ் மேலும் குறிப்பிடுகையில், "சமூக ஊடகங்களில் வரும் எதிர்வினைகளைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன். வேறு என்ன நடக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? சில நாட்களில் நீங்கள் விளையாடப் போகும் ஒரு வீரரை, அதுவும் எதிர் அணியின் கேப்டனைச் சந்திக்கும்போது, அடிப்படைக் மரியாதையை வெளிப்படுத்துவதுதான் விளையாட்டு தர்மம்" என்றார்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் பதற்றம் காரணமாக, ஒரு சாதாரண விளையாட்டு வீரர்களின் சந்திப்புகூட பெரிய அளவில் விவாதப் பொருளாக மாற்றப்படுகிறது. ஆனால் உண்மையில், சர்வதேசப் போட்டிகளில் தங்கள் நாடுகளின் பிரதிநிதிகளாக பங்கேற்கும் வீரர்கள், தொழில்முறை ரீதியாக நடந்துகொள்வது இயல்பானது. அதையேதான் சூர்யகுமாரும், சல்மானும் செய்துள்ளனர்.
எந்தவொரு சர்வதேசப் போட்டியிலும், தங்கள் நாட்டுக்காக ஆடும் ஒவ்வொரு வீரரும், தங்களின் சிறந்த நடத்தையை வெளிப்படுத்த வேண்டும். அந்த வகையில், இந்திய மற்றும் பாகிஸ்தான் கேப்டன்கள் இருவரும் தொழில்முறைக்கு ஏற்றவாறு நடந்துகொண்டனர். எனவே, இந்தக் கைகுலுக்கல் சர்ச்சை என்பது தேவையற்ற வதந்தியே தவிர, அதில் உண்மையில்லை என்பது தெளிவாகிறது.