துபாய்: 2025 ஆசிய கோப்பையில் இன்று நடைபெறவிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி, வழக்கமான கிரிக்கெட் மோதலைத் தாண்டி, இந்திய வீரர்களுக்கு ஒரு மாபெரும் மனப்போராட்டமாக மாறியுள்ளது. "பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது" என்ற புறக்கணிப்புக் குரல்கள் ஒருபுறம் ஓங்கி ஒலிக்க, மறுபுறம் "பாகிஸ்தானிடம் தோற்கவே கூடாது" என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு என இருமுனைக் கத்தி மேல் இந்திய அணி நிற்கிறது. இந்தப் போட்டியில் வென்றாலும், தோற்றாலும் விமர்சனங்கள் நிச்சயம் என்ற சங்கடமான சூழலுக்கு இந்திய வீரர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
2025 ஆசியக் கோப்பை குரூப் ஏ பிரிவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டியில் இந்திய அணி வென்றால் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆடக் கூடாது என்ற புறக்கணிப்புக் குரல்களை ஓரளவு சமாளிக்கலாம். ஆனால், தோல்வியடைந்தால், 'புறக்கணிப்பு ஆதரவாளர்கள்' மற்றும் 'கிரிக்கெட் ரசிகர்கள்' என இரு தரப்பிடமிருந்தும் கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இந்த அசாதாரண அழுத்தம் காரணமாக இந்திய வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. வீரர்களை மனரீதியாகத் தயார்படுத்தும் பெரும் பொறுப்பை தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஏற்றுள்ளார். ஆனாலும், களத்தில் ஆடப் போகும் வீரர்களுக்கு தான் இதன் வீரியம் புரியும்.
ஆனால், ஒருவேளை பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தால், இந்திய அணி இதுவரை சந்தித்திராத ஒரு கடும் விமர்சனச் சூறாவளியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்தத் தாக்குதல் இரண்டு முனைகளிலிருந்து வரும் -
புறக்கணிப்பு ஆதரவாளர்கள்: "நாங்கள் ஏற்கெனவே சொன்னோம் கேட்கவில்லையே! நாட்டின் உணர்வுகளை மதிக்காமல், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாட்டுடன் விளையாடச் சென்று, இப்போது தோற்று அவமானப்படுத்தி விட்டீர்கள்" என்று அவர்கள் கடுமையாகச் சாடுவார்கள். இந்தத் தோல்வி, அவர்களின் 'புறக்கணிப்பு' வாதத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துவிடும். எதிர்காலத்தில் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆடவே முடியாத நிலை கூட ஏற்படலாம்.
கிரிக்கெட் ரசிகர்கள்: மறுபுறம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை நடத்த வேண்டும் என்று விரும்பிய கோடிக்கணக்கான ரசிகர்களின் கோபமும் வெளிப்படும். "பாகிஸ்தானிடம் எப்படித் தோற்கலாம்?" என்ற அவர்களின் வழக்கமான கோபம், இந்தச் சூழலில் இன்னும் பல மடங்காக வெளிப்படும். "விளையாடப் போனதே தவறு, இதில் தோற்று வேறு வந்துள்ளீர்கள்" என்ற கோணத்தில் விமர்சனங்கள் எழும். என்ன செய்யப் போகிறது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி?