மும்பை: 2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது சூப்பர் 8 சுற்றை எட்டியுள்ளது. இந்த நிலையில், மார்ச் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியும், சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி கணித்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்காக 1993 முதல் 1996 வரை 19 டெஸ்ட் மற்றும் 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் 55 வயதான பாசித் அலி. இவர் சமீபத்தில் பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். முன்னாள் வீரர் சோயிப் மாலிக் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியில், இந்த உலகக்கோப்பையின் அரையிறுதிக்குச் செல்லும் நான்கு அணிகள் எவை என்ற கேள்வி பாசித் அலியிடம் கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், "இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் இறுதிப்போட்டியில் விளையாடும் என்று நான் கூறுகிறேன்" என்று தெரிவித்தார். மேலும், அரையிறுதிக்கு முன்னேறும் மற்ற இரண்டு அணிகளாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளை அவர் தேர்வு செய்தார்.

இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல், இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்று தனது கணிப்பை வெளியிட்டார்.
டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. எக்ஸ் பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒய் பிரிவில் பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் உள்ளன.
சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 24 ஆம் தேதி பல்லேகல மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது. பிப்ரவரி 28 ஆம் தேதி அதே மைதானத்தில் நடைபெறும் தனது கடைசி சூப்பர் 8 போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது.
மறுபுறம், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தனது முதல் சூப்பர் 8 போட்டியில் நாளை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. 2024 டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் மோதிய இந்த இரு அணிகளும் மீண்டும் மோதுவது ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி பிப்ரவரி 26 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. பின்னர் மார்ச் 1 ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் தனது கடைசி சூப்பர் 8 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதவுள்ளது.
மொத்தம் மூன்று சூப்பர் 8 போட்டிகளில் ஆட உள்ள இந்திய அணி அணி அதில் குறைந்தது இரண்டில் வெற்றி பெற்று அதிக நெட் ரன் ரேட் பெற்று இருக்க வேண்டும். அப்போதுதான் அரையிறுதிக்கு முன்னேற முடியும்.