துபாய்: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியின் போது ஆத்திரமூட்டும் வகையிலும், விளையாட்டு நெறிமுறைகளுக்கு எதிராகவும் நடந்துகொண்ட பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ரவுஃப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோருக்கு எதிராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளது.
செப்டம்பர் 21 ஆம் தேதி துபாயில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் வீரர்களின் இரண்டு செயல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின -
சாஹிப்சாதா ஃபர்ஹானின் 'துப்பாக்கிச் சூடு' கொண்டாட்டம்: இந்தப் போட்டியில் அரைசதம் அடித்த பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான், தனது பேட்டை ஒரு துப்பாக்கியைப் போல பாவித்து, சுடுவது போல சைகை செய்தார். இந்த வன்முறையான கொண்டாட்டம் கிரிக்கெட் உலகில் பரவலான கண்டனங்களைப் பெற்றது.

ஹாரிஸ் ரவுஃபின் 'விமானத் தாக்குதல்' சைகை: இந்தப் போட்டியின் போது, இந்திய ரசிகர்கள் 2022 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி அடித்த சிக்ஸர்களை நினைவுபடுத்தி 'கோலி, கோலி' என்று முழக்கமிட்டதால் ஆத்திரமடைந்த ரவுஃப், இந்திய ராணுவ நடவடிக்கையைக் கிண்டல் செய்யும் வகையில், விமானம் சுட்டு வீழ்த்தப்படுவது போல சைகை செய்தார். மேலும், இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோருடன் அவர் வார்த்தை மோதலிலும் ஈடுபட்டார்.
இந்த இரண்டு சம்பவங்களையும் சுட்டிக்காட்டி, பிசிசிஐ புதன்கிழமை அன்று ஐசிசிக்கு அதிகாரப்பூர்வமாக மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியுள்ளதாகவும், ஐசிசி அந்தப் புகாரை ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விதிகளின்படி, இந்தக் குற்றச்சாட்டுகளை ஹாரிஸ் ரவுஃப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் எழுத்துப்பூர்வமாக மறுக்கும் பட்சத்தில், ஐசிசியின் எலைட் பேனல் நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் தலைமையில் அதிகாரப்பூர்வ விசாரணை நடத்தப்படும். விசாரணையின் முடிவில், வீரர்கள் தங்கள் செயல்களை நியாயப்படுத்தத் தவறினால், ஐசிசியின் நடத்தை விதிகளின்படி அவர்கள் அபராதம் அல்லது போட்டிகளில் விளையாடத் தடை போன்ற தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும்.
ஆனால், இதுகுறித்து போட்டிக்குப் பிறகு பேசிய சாஹிப்சாதா ஃபர்ஹான், தனது செயலுக்கு எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை. "அந்தக் கொண்டாட்டம், அந்த நேரத்தில் தன்னிச்சையாக வெளிப்பட்டது. நான் அரைசதம் அடித்தால் பெரிதாகக் கொண்டாடுவதில்லை. ஆனால் அப்போது திடீரென அப்படிச் செய்யத் தோன்றியது, மக்கள் அதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று நான் கவலைப்படவில்லை. இந்தியாவுக்கு எதிராக மட்டுமல்ல, எந்த அணிக்கு எதிராகவும் நாங்கள் ஆக்ரோஷமான கிரிக்கெட்டைத்தான் விளையாட வேண்டும்" என்று அவர் கூறியது, இந்தச் சர்ச்சையை மேலும் பெரிதாக்கியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஏற்கனவே கைகுலுக்கல் விவகாரம் தொடர்பாகப் பனிப்போர் நிலவி வரும் நிலையில், பிசிசிஐயின் இந்த அதிகாரப்பூர்வ புகார், இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையேயான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் குரூப் சுற்றுப் போட்டிக்கு பிறகு பஹல்காம் தாக்குதல் குறித்து பேசியதற்கு எதிராக் புகார் அளித்துள்ளது. இதன் மூலம், பிசிசிஐ மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏட்டிக்கு போட்டியாக மோதி உள்ளன. இந்த புகார் மோதலில் என்ன நடக்கும்? என்று பார்க்கலாம்.