மும்பை: ஆசியக் கோப்பைத் தொடரில் பவர் பிளேவிலேயே இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா 3 ஓவர்களை வீசுவதில் உடன்பாடு இல்லை என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் விமர்சித்துள்ளார். இதன் மூலமாக எதிரணிகள் எளிதாக திட்டமிட நேரம் எடுத்துக் கொள்கிறார்கள் என்று கூறிய அவர், இப்படியே தொடர்ந்தால் இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று இரவு விளையாட உள்ளன. இந்தப் போட்டியை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வரும் சூழலில், டிக்கெட்டுகள் முழுமையாக விற்று தீர்ந்துள்ளன. ஏற்கனவே நடந்த லீக் மற்றும் சூப்பர் போட்டியிலும் இந்திய அணி அபாரமாக வென்றது. இதனால் பைனலிலும் இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்வதற்கும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ராவின் பவுலிங் மிகவும் அவசியமானது. அதுமட்டுமல்லாமல் இந்த ஆசியக் கோப்பையில் பவர் பிளே ஓவர்களிலேயே பும்ரா 3 ஓவர்களை வீசிவிடுகிறார். இதனால் அடுத்த 14 ஓவர்களில் வெறும் 1 ஓவர் மட்டுமே பும்ரா வீசுவார் என்ற நிலை உருவாகிவிடுகிறது.
இதனால் எதிரணி வீரர்கள் எளிதாக பும்ராவின் அட்டாக்கை கணித்து திட்டமிட தொடங்கிவிடுகிறார்கள். இதற்கு முன்பாக நடந்த பாகிஸ்தான் போட்டியிலும் கூட 3 ஓவர்களிலேயே பும்ரா 34 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதுதொடர்பாக இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் பேசுகையில், எனது கவலையெல்லாம் பவர் பிளேவிலேயே பும்ரா 3 ஓவர்களை வீசி வருகிறார். இந்திய கிரிக்கெட் ரசிகராக அதுதான் எனது பிரச்சனை.
பும்ரா கடைசி 14 ஓவர்களில் ஒரு ஓவரை மட்டுமே வீசுகிறார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. பும்ரா ஏற்கனவே அடிக்கடி காயம் அடைவதால், அனைத்து போட்டிகளிலும் விளையாடுவதில்லை. ஏற்கனவே இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பும்ரா பிரேக் எடுப்பதன் மூலமாக முழு ஃபிட்னஸ் உடன் இருக்க முடிவதாக தெரிகிறது.
இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பும்ராவை தொடர்ச்சியாக இப்படியே பயன்படுத்தினால், நம்மால் மீண்டும் டி20 உலகக்கோப்பையை வெல்ல முடியாது. இதனை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். பும்ரா தொடர்ச்சியாக விளையாடும் போது அவரின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்து வருகிறது.
ஆனால் ஓய்வுக்கு பின் திரும்புகையில் பும்ரா லைன் மற்றும் லெந்த் ஆகியவற்றை பிடிக்க சிறிது நேரம் எடுத்துக் கொள்கிறார். ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் மீண்டும் பும்ரா அதிக ரன்களை விட்டுக் கொடுத்து விக்கெட் எடுக்கவில்லை என்றால், இந்திய அணி வெல்வதற்கு கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய சூழல் உருவாகும்.