துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி, தங்களது அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடுவது, மற்ற அணிகளை விட அதிக வாய்ப்புகளையும், நன்மைகளையும் அளிக்கிறது என்று முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் நாசர் ஹுசைன் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார். இப்படியே விளையாடி இந்திய அணி மற்றொரு சர்வதேச கோப்பையை வென்று விடும் எனவும் அவர் கூறி உள்ளார்.
2025 சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெறுகிறது. ஆனால், பாகிஸ்தானில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறி, இந்திய அணி அங்கு பயணம் செய்ய மறுத்துவிட்டது. அதனால் இந்திய அணியின் போட்டிகள் அனைத்தையும் துபாயில் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. ஒருவேளை இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்க மறுத்தால், இது தொடரை நடத்துவதிலேயே சிக்கல் எழும்.

இந்திய கிரிக்கெட் சந்தை தான் உலகிலேயே மிகப்பெரியது. இந்த தொடரில் கிடைக்கும் வருமானத்தில் சுமார் 60 சதவீதம் இந்தியாவில் இருந்து மட்டுமே கிடைக்கும். மற்ற ஏழு நாடுகளையும் சேர்த்து மீதமுள்ள 40 சதவீத வருமானம் கிடைக்கும். எனவே, இந்திய அணியை இந்த தொடரில் பங்கேற்க வைக்க வேண்டும் என்றால், வேறு இடத்தில் தான் தொடரை நடத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் தான், துபாயில் இந்திய அணி ஆடும் போட்டிகள் அனைத்தும் நடத்தப்படுகிறது.
ஆனால், துபாயில் மட்டுமே இந்திய அணி ஆடுவதால், வேறு மைதானங்களுக்கு பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதே சமயம், மற்ற அணி வீரர்கள் பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கும், பாகிஸ்தானிலேயே மூன்று நகரங்களுக்கு இடையேயும் பயணம் செய்ய வேண்டியது இருக்கும்.
ஒவ்வொரு மைதானத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப, மற்ற அணிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டி இருக்கும். ஒவ்வொரு பிட்ச்சின் தன்மைக்கு ஏற்ப, அணி தேர்வில் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். ஆனால், இந்திய அணி எங்குமே பயணம் செய்ய வேண்டியது இல்லை. அவர்களுக்கு ஒரே ஹோட்டல், ஒரே ஓய்வறை, ஒரே மைதானம் என அனைத்துமே பழகிப் போயிருக்கும்.
மேலும், துபாய் மைதானத்தில் உள்ள பிட்ச்சில் சுழற் பந்துவீச்சு எடுபடும் என்பதால், இந்திய அணி 5 சுழல் பந்துவீச்சாளர்களை 15 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்திருக்கிறது. அதே சமயம், பாகிஸ்தானில் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அதிக விக்கெட்கள் கிடைக்கும் என்பதால், மற்ற அணிகள் ஒன்று அல்லது இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை மட்டுமே தங்கள் உத்தேச அணியில் தேர்வு செய்துள்ளன.
உதாரணத்திற்கு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியிலும் இந்த வித்தியாசம் பெரிய அளவில் தெரிந்தது. பாகிஸ்தான் அணியில் ஒரே ஒரு முழு நேர சுழல் பந்துவீச்சாளர் மட்டுமே இடம்பெற்று இருந்தார். ஆனால், இந்திய அணியில் மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் ஆடினர். இந்திய அணிக்கு, தாங்கள் ஆடும் அனைத்து போட்டிகளுமே துபாயில் நடைபெறப் போகிறது என்பது தெரிந்ததால் தான், ஐந்து சுழற் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்துள்ளனர்.
இவற்றை சுட்டிக்காட்டிய நாசிர் ஹுசைன், இந்தியாவிற்கு தங்கள் சூழ்நிலை முன்பு தெரிந்திருப்பதால், அதை பயன்படுத்தி இருக்கிறார்கள். இப்போதைக்கு அவர்கள் தங்கள் பணியை மட்டும் சிறப்பாக செய்தால், மற்றொரு சர்வதேச கோப்பையை வெல்வார்கள் எனவும் அவர் கூறினார்.
முன்னதாக 2024 டி20 உலக கோப்பையின் போதும் இந்திய அணி நியூயார்க் மைதானத்தில் மட்டுமே குரூப் சுற்றுப் போட்டிகள் அனைத்திலும் விளையாடியது. மேலும், இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறினால் எந்த மைதானத்தில் விளையாடும் என்பதும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதே போன்ற ஒரு விஷயம் இப்போதும் நடைபெற்று வருவதாக புகைச்சல் எழுந்துள்ளது.