IND vs PAK: "லூசர்".. மைதானத்திலேயே பாகிஸ்தான் வீரர் ஷஹீன் ஷா-வை விளாசிய ரசிகர்கள்.. என்ன நடந்தது?
துபாய்: பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அஃப்ரிடி "லூசர்" (Loser, தோல்வி அடைபவர்) என ரசிகர்கள் கடுமையாகக் கோஷமிட்டனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியின் போது ரசிகர்கள் எழுப்பிய இந்தக் கோஷத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. என்ன நடந்தது? என பார்க்கலாம்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் இந்திய அணி 242 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிக் கொண்டிருந்தது. விராட் கோலி அப்போது சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். இந்திய அணியின் வெற்றிக்குத் தேவையான ரன்கள் 17 ஆகவும், விராட் கோலியின் சதத்துக்குத் தேவையான ரன்கள் 13 ஆகவும் இருந்தது.

அப்போது ஷாஹீன் ஷா அஃப்ரிடி வீசிய 42வது ஓவரில் வேண்டுமென்றே மூன்று வைடுகளை வீசினார். அதன் மூலம் இந்திய அணியின் வெற்றிக்குத் தேவையான ரன்கள் குறைந்தது. கோலி சதம் அடிக்க முடியுமா? என்ற சிக்கல் எழுந்தது. அதற்காகத் தான் ஷஹீன் ஷா அவ்வாறு வைடு வீசினார் என்பதை அனைவரும் உணர்ந்தே இருந்தனர்.
அந்த ஓவரின் முடிவில் இந்திய அணியின் வெற்றிக்கு நான்கு ரன்கள் தேவை. விராட் கோலியின் சதத்துக்கு ஐந்து ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. பின்னர் ஒரு வழியாக விராட் கோலி பவுண்டரி அடித்து தனது சதத்தை நிறைவு செய்தார். சரியாக இந்திய அணியும் வெற்றியை நிறைவு செய்தது.
விராட் கோலி சதம் அடிக்கக் கூடாது என்பதற்காக ஷாஹீன் ஷா அஃப்ரிடி வைடு பந்துகளை வீசியது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியது. அந்த ஓவரில் ஒவ்வொரு வைடு பந்தை அவர் வீசியபோதும் மைதானத்தில் இருந்து இந்திய ரசிகர்கள் "லூசர், லூசர்" என கோஷமிட்டனர். அதாவது ஷாஹீன் ஷா அஃப்ரிடி தோல்வி அடைபவர் என்ற பொருளில் அவ்வாறு கோஷமிட்டனர்.
இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டு அணிகளிலுமே மிக மோசமாக பந்து வீசியது ஷாஹீன் ஷா அஃப்ரிடி தான். அவர் எட்டு ஓவர்கள் வீசி அதில் 74 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். அதாவது ஒரு ஓவருக்கு சராசரியாக 9.2 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் அவர் ரன்களை வாரி இறைத்தது பாகிஸ்தான் அணியின் தோல்விக்கும் முக்கிய காரணமாக அமைந்தது.
துபாய் போன்ற மந்தமான பிட்ச்சிலேயே இப்படி ரன்களை வாரி இறைத்திருக்கும் ஷாஹீன் ஷா அஃப்ரிடி தனது தவறுகளை சரி செய்வது எப்படி? என்று பார்க்காமல் விராட் கோலியின் சதத்தை தடுத்து நிறுத்துவது எப்படி? என்று திட்டமிட்டு செயல்பட்டது தான் ரசிகர்களின் கோபத்துக்கும் முக்கிய காரணமாகவும் மாறி இருக்கிறது. பாகிஸ்தான் ரசிகர்களும் அவரது செயல்பாட்டை விமர்சித்து வருகின்றனர்.
விராட் கோலி இந்தப் போட்டியில் சதம் அடித்ததால் ஷாஹீன் ஷா அப்ரிடி மீதான விமர்சனங்கள் போட்டியுடன் முடிவுக்கு வந்தன. கோலி தனது 51 வது ஒருநாள் போட்டி சதத்தை நிறைவு செய்து இருந்தார்.


Click it and Unblock the Notifications