துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்குவாரா? என சில ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். அதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போது அதற்கும் முடிவு கட்டும் வகையில் இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
ரிஷப் பண்ட் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முந்தைய தினம் நடைபெற்ற வலைப் பயிற்சியில் ஈடுபடவில்லை. அது ஏன்? என பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, சுப்மன் கில் அதற்கு பதிலளித்தார். ரிஷப் பண்ட்டுக்கு காய்ச்சல் இருப்பதால் அவர் பயிற்சி செய்ய வரவில்லை என்று கூறினார்.

இதன் மூலம் ரிஷப் பண்ட்டால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாட முடியாது என்றும் தெரிய வந்துள்ளது. அவரை தேர்வு செய்ய நினைத்தாலும் அது முடியாது. முன்னதாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முந்தைய பத்திரிகையாளர்கள் சந்திப்பில், கே.எல். ராகுல் தான் இந்தியாவின் முதன்மை விக்கெட் கீப்பர் என்றும், ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடி இருந்தாலும் அவருக்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை எனவும் வெளிப்படையாகவே பேசி இருந்தார்.
அது ஒரு தரப்பு ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தி இருந்தது. சில முன்னாள் வீரர்களும், ரிஷப் பண்ட்டின் வாழ்க்கையை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வீணடிக்கிறார் என விமர்சித்தனர். மேலும், "இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ஒருவர் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அணி சார்ந்த காரணங்கள் அல்லாது தனிப்பட்ட ஒரு காரணத்துக்காக தனக்கு பிளேயிங் லெவனில் இடம் அளிப்பதில்லை" எனக் பத்திரிகை ஒன்றில் இந்திய அணி வீரர் கூறியிருந்ததாக செய்திகள் வெளியாகின.
அந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தான் என ஊகங்களும் கிளம்பின. இவ்வாறு ரிஷப் பண்ட்டை சுற்றி எதிர்பார்ப்புகளும், சர்ச்சைகளும் இருக்கும் நிலையில், அவர் தற்போது காய்ச்சலில் சிக்கி இருக்கிறார். தற்போது கே.எல். ராகுல் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருக்கும் நிலையில், அவருக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் இந்திய அணியின் நிலைமை சிக்கலாகிவிடும்.