துபாய்: சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி 14,000 ரன்களை சேர்த்து பிரம்மாண்ட மைல்கல் சாதனை படைத்துள்ளார். இதுவரை மூன்று வீரர்கள் மட்டுமே சர்வதேச அளவில் 14,000 ஒரு நாள் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டி உள்ளனர். சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்களையும், குமார் சங்ககாரா 14,234 ரன்களையும், விராட் கோலி 14,085 ரன்களையும் குவித்துள்ளனர்.
தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் வீரர்களில் விராட் கோலிக்கு அடுத்து இந்த இலக்கை நெருங்கும் வாய்ப்பு உள்ள வீரர் என்றால் அது ரோஹித் சர்மா தான். அவர் தற்போது ஒருநாள் போட்டிகளில் 11,049 ரன்கள் குவித்து இருக்கிறார். ஆனால் அவரால் விராட் கோலியைப் போல 14,000 ஒருநாள் போட்டி ரன்களை எட்ட முடியாது. அதை நெருங்கக் கூட முடியாது என்பதே உண்மை.

தற்போது ரோஹித் சர்மாவுக்கு 37 வயது ஆகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் அவர் 38 வயதை எட்டி விடுவார். இப்போதே ரோஹித் சர்மாவை ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்குவதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் அவர் இந்திய டெஸ்ட் அணி மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
ரோஹித் சர்மா சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முடிவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பதற்கும் கூட சிறிய அளவிலான வாய்ப்பு உள்ளது. ஒருவேளை அவர் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் ஆடினாலும் கூட அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே விளையாடுவார்.
இந்திய அணி சமீப காலமாக அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது இல்லை என்பதால் ரோஹித் சர்மா அதிக ஒரு நாள் போட்டி ரன்கள் குவிப்பதில் அதுவும் மற்றொரு சிக்கலை ஏற்படுத்தும். எனவே ரோஹித் சர்மா தற்போது உள்ள சூழ்நிலையில் 12,000 ஒரு நாள் போட்டி ரன்களை எட்டுவதே மிகப்பெரிய விஷயமாக இருக்கும்.
ரோஹித் சர்மாவைத் தவிர்த்து, தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் வீரர்களில் மிகச் சில வீரர்களே 10,000 ஒருநாள் போட்டி ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது. வயது மற்றும் குறைந்த அளவில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ஆடப்பட்டு வருவதை வைத்துப் பார்க்கும் போது, கேன் வில்லியம்சன் (7041 ரன்கள்), ஜோ ரூட் (6702 ரன்கள்), பாபர் அசாம் (6106 ரன்கள்) ஆகிய மூன்று வீரர்கள் மட்டுமே 10,000 ஒரு நாள் போட்டி ரன்களை எட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது.